நடிகைக்கு கரப்பான் ரைஸ்..! ரெண்டு அவிச்ச முட்டை ஸ்விக்கியில் 350 ரூபாயாம்..! ஊரடங்கில் அடங்காத ஆன்லைன் வசூல்..!
ஊரடங்கு கட்டுப்பாடுகளை பயன்படுத்தி இருமடங்கு விலையில் உணவு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்த்துவரும் ஸ்விக்கி நிறுவனம், நடிகை நிவேதா பெத்துராஜிக்கு கரப்பான் பூச்சி பிரைடுரைஸ் சப்ளை செய்ததால் மூன்லைட் ஓட்டல் இழுத்து பூட்டப்பட்டுள்ளது.
ஸ்விக்கி...! இன்று பல வேலையில்லா பட்டதாரிகளுக்கு பணி வழங்கி இருக்கும் உணவு பரிமாற்ற நிறுவனம்..! 12 கிலோ மீட்டர்களுக்குள் இருக்கும் உணவகங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் விரும்பிய உணவுப்பொருட்களை தக்க நேரத்தில் விரைந்து சென்று வழங்கி வந்த ஸ்விக்கி மூலம் வீடு தேடி வந்திருக்கின்றது கரப்பான் ரைஸ்..!
சென்னை பெருங்குடியில் உள்ள மூன்லைட் ஓட்டலில் இருந்து நடிகை நிவேதா பெத்துராஜிக்கு, ஸ்விக்கி ஊழியர் கொண்டு வந்த உணவில் கரப்பான் பூச்சி ஒன்று செத்து கிடந்தது, அதனை படம் எடுத்து நடிகை நிவேதா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். நிவேதாவுக்கு அறிமுகமான அரசியல் பிரபலம் ஒருவரின் புகாரின் பேரில் உணவு பாதுகப்பு அதிகாரிகள் உடனடியாக விரைந்து சென்று மூன்லைட் ஓட்டலில் ஆய்வு செய்தனர்.
அங்கு பல நாட்களாக மசாலாவில் ஊறி ப்ரீசரில் வைக்கப்பட்டிருந்த கெட்டுபோன 10 கிலோ கோழி இறைச்சிகளையும், பல்வேறு உணவு பண்டங்களையும் கைப்பற்றி குப்பையில் கொட்டினர்..
எலி முதல் கரப்பான் பூச்சிகள் வரை சர்வசாதாரனமாக வந்து செல்லும் வகையில் குறைந்தபட்ச பராமரிப்பு கூட இல்லாமல் உணவு பொருட்களை வைத்திருந்ததால், பெருங்குடி மூன்லைட் ஓட்டல் கிளையை, இழுத்து பூட்டி சீல் வைத்தனர்.
இதில் கரப்பான் பூச்சி உணவை சப்ளை செய்த ஸ்விக்கி மீது எந்த தவறும் இல்லை..! ஆனால் உணவை டெலிவரி செய்வதற்கு ஸ்விக்கி வசூலிக்கும் ஊரடங்கு கால அதிக கட்டணம் தான் பிரச்சனைக்குரியதாக மாறியுள்ளது. ஏற்கனவே தனது ஊழியர்களுக்கு குறைவான கமிஷன் வழங்குவதாக புகாருக்குள்ளான ஸ்விக்கி, தற்போது வாடிக்கையாளரிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதாக வாடிக்கையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வீட்டில் இருந்தபடியே உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டு பழகிய உணவுப்பிரியர்களை, ஊரடங்கு மேலும் முடக்கியதால் இந்த கட்டண உயர்வு கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உதாரணத்துக்கு 2 அவித்த முட்டை 350 ரூபாய் எனவும், 3 இட்லி 275 ரூபாய் எனவும், ஒரு பொங்கல் 275 ரூபாய் எனவும் ஸ்விக்கியில் கட்டணம் வசூலிக்கபடுவதாக உணவு பிரியர்கள் பொங்குகின்றனர்.
முருகன் இட்லி கடையின் உணவக விலைப்பட்டியலில் 2 இட்லி 57 ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஸ்விக்கியில் ஆர்டர் செய்தால் 107 ரூபாய் வசூல் செய்யப்படுகின்றது. மூன்லைட் ஓட்டலில் தயிர் சாதம் 90 ரூபாய் என விலையிடப்பட்டுள்ளது ஆர்டர் செய்தால் ஸ்விக்கி 141 ரூபாயை அபேஸ் செய்து கொள்கின்றது.
இது தொடர்பாக ஸ்விக்கி தரப்பில் கேட்டால், தறிகெட்டு ஏறிக் கொண்டே இருக்கும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாகவும், ஊழியர்களுக்கு கமிஷன் தொகையை அதிகப்படுத்தி கொடுப்பதாலும், இந்த விலை உயர்வு ஏற்பட்டிருப்பதாகவும், பல ஓட்டல்கள் செயல்படவில்லை என்ற நிலையிலும் ஒரு சர்வீசுக்கு 60 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுவதாகவும் கூறுகின்றனர்.
ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ள உணவகத்தில் இருந்து உணவை கொண்டு வந்து சேர்ப்பதற்கும் 60 ரூபாய் வசூலிப்பது நியாயமா? என்று பாதிக்கப்பட்ட உணவு பிரியர் கேள்வி எழுப்புகிறார். ஸ்விக்கி வசூலிக்கும் தொகையில் பெரும்பகுதி, உணவை காத்திருந்து பெற்று அலைந்து திரிந்து கொண்டு சேர்க்கும் ஊழியர்களுக்கு சென்றால் மகிழ்ச்சி என்றும், ஆனால் அவர்களுக்கு கமிஷனை குறைத்துக் கொடுத்து விட்டு ஸ்விக்கி நிறுவனமோ இருந்த இடத்தில் இருந்தே, பாய்ஸ் பட செந்தில் கதாபாத்திரம் போல வாடிக்கையாளர்களிடம் கொள்ளை லாபம் சம்பாதிப்பதா குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.
Comments