அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் கசிவு.? கொரோனா நோயாளி பலி.!
நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தனியார் வங்கி ஊழியர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான ராஜேஷ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 11 நாட்களாக அரசு மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், புதன் கிழமை இரவு ராஜேஷ் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. உயிரிழப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தான் ராஜேஷ் வீடியோ காலில் வீட்டுக்கு பேசியதாகவும், மருத்துவரின் கவனக்குறைவால் தான் தனது கணவர் உயிரிழந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டும் ராஜேஷின் மனைவி, மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், புதன் கிழமை இரவு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் விநியோகம் செய்யும் குழாயில் கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் பாதுகாப்பு கருதி கொரோனா வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளை, வேறு வார்டுக்கு மாற்றியதாகவும் கூறப்படுகிறது.
அப்போது, ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதால், ராஜேஷ் உயிரிழந்துவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதேபோன்று அங்குள்ள 15-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு போதிய அளவு ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சுத்திணறலால் சிரமப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்ட அருண் தம்புராஜ் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினார்.
முன்னதாக, இது குறித்து கூறியிருந்த மருத்துவமனை டீன், ஆக்சிஜன் சப்ளையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றார். உயிரிழந்த நபர் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது ஆக்சிஜன் அளவு 70 கீழேயே இருந்ததாகவும், அதனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments