உள்நாட்டுப் பொம்மைகளை வாங்கி ஆதரிக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்
உள்நாட்டுப் பொம்மைகளின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், அவற்றையே வாங்கிப் பயன்படுத்தி ஆதரிக்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுமையான பொம்மைகள் தயாரிக்கும் டாய்கத்தான் போட்டியின் பங்கேற்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் கலந்துரையாடினார். அப்போது, பொம்மைகள் குழந்தைகளின் முதல் நண்பன் எனக் குறிப்பிட்டதுடன், உலகப் பொம்மை சந்தை 7 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் உள்ளதாகவும், அதில் இந்தியா வெறும் ஒன்றரை விழுக்காட்டைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தியாவின் பொம்மைப் பயன்பாட்டில் 80 விழுக்காடு இறக்குமதி செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் போக்கு மாறவேண்டும் என வலியுறுத்தினார். இந்தியாவில் மெய்நிகர், மின்னணு, இணையத்தள விளையாட்டுகளின் சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயுமாறும் கேட்டுக்கொண்டார். இப்போதுள்ள பெரும்பாலான இணையத்தள மற்றும் மின்னணு விளையாட்டுகள் வன்முறையை ஊக்குவித்து, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் திறன்கள், கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் சமூகம் பற்றித் தெரிந்து கொள்ள உலக நாடுகள் ஆர்வமாக இருப்பதால், அதை நிறைவு செய்யப் பொம்மைகளுக்கு மிகப் பெரும் பங்குண்டு எனத் தெரிவித்தார். விடுதலைப் போராட்ட வீரர்களின் கதைகள், அவர்களின் வீரம், தலைமைப் பண்பு ஆகியவற்றை விளையாட்டுக் கருத்துருக்களாக உருவாக்கலாம் எனத் தெரிவித்தார்.
Comments