மு.க.ஸ்டாலின் என்ன டாக்டரா? எனக் கேட்டவர் எடப்பாடி பழனிசாமி: முதலமைச்சர் பதிலால் பேரவையில் சிரிப்பலை

0 10861

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்பதைப் போல, கடந்த அதிமுக ஆட்சியில், பிப்ரவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தை மறந்துவிட்டதாக விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என எடப்பாடி பழனிசாமி அலட்சியமாக இருந்ததால் கொரோனா அதிகரித்ததாக குற்றம்சாட்டினார்.

பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாத்திற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின் மே 6 ஆம் தேதி வரை முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிசாமிதான் எனக் குறிப்பிட்டார். கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள கூடாது என அவரது கைகளை யாரும் கட்டி வைக்கவில்லை என்றும், மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என தெரிந்து அலட்சியமாக இருந்தது தான் உண்மை என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தொற்று அதிகரித்தபோது அதனை கட்டுப்படுத்த ஆலோசனைக் கூட்டம் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியதாகவும் ஆனால் எந்த பதிலும் வரவில்லை என்றும் கூறினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதை போல், தாம் அலட்சியமாக இருக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி மறுப்புத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, தாம் அரசுக்கு ஆலோசனை கூறியபோது, மு.க.ஸ்டாலின் என்ன டாக்டரா? என எடப்பாடி பழனிசாமி கேட்டதாக, முதலமைச்சர் குறிப்பிட்டார். கொரோனாவுக்குப் பிறகு அனைவரும் டாக்டர்கள் ஆகிவிட்டார்கள் என்பதுதான் உண்மை என மு.க.ஸ்டாலின் கூறியபோது அவையில் சிரிப்பலை எழுந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments