கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க மூன்று வழிகள் உள்ளன - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா
மூன்றாவது கொரோனா அலையைத் தடுக்க தடுப்பூசி, தீவிர கண்காணிப்பு, பேரிடர் கால விதிகளைப் பின்பற்றுதல் போன்றவை மிகவும் அவசியம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கொரோனா முதல் அலை ஓய்ந்த போது விதிகளை கடைபிடிக்காததால், இரண்டாம் அலையாக உருவானதாகவும், இதே தவறை மூன்றாவதுஅலையிலும் செய்யக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மூன்றாவது அலை என்பது நாம் எப்படி நடந்துக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது என்று கூறியுள்ள குலேரியா, அதனைத் தவிர்க்க வேண்டுமானால் தடுப்பூசி போட்டுக் கொள்வது, தீவிரமான கண்காணிப்பை நோய்த்தொற்று பகுதிகளில் ஏற்படுத்துவது, முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற விதிகளைப் பின்பற்றுவது ஆகிய மூன்று வழிகள் இருப்பதாக விளக்கினார்.
இதன் மூலம் மூன்றாவது அலையை ஒத்திப் போடலாம் அல்லது அதன் வீரியத்தை குறைத்துவிடலாம் என்றும் ரந்தீப் குலேரியா குறிப்பிட்டுள்ளார்.
Comments