குப்பை - கேஸ் - காசு மாநகராட்சியின் புதிய முயற்சி

0 3276
குப்பை - கேஸ் - காசு மாநகராட்சியின் புதிய முயற்சி

சென்னை மாநகரில் உள்ள குப்பை கிடங்குகளில் மலை போல் குப்பைகள் தேங்குவதை தவிர்க்க, சென்னை மாநகராட்சி எடுத்துவரும் புதிய முயற்சி 

சென்னை நகரில் ஈரமான குப்பை, ஈரமற்ற குப்பை, கட்டிடக் கழிவு என நாளொன்றுக்கு 5,100 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. கிடங்குகளில் குப்பை தேங்குவதைக் குறைக்க புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது மாநகராட்சி நிர்வாகம்.

தினமும் உருவாகும் திடக்கழிவில் 500 டன் குப்பைகள் 161 இடங்களில் உரமாகவும், இரண்டு இடங்களில் மண்புழு மூலம் உரமாகவும், 38 இடங்களில் மைக்ரோ லெவல் பிளேன்ட்ஸ்(micro level plants) மற்றும் 5 இடங்களில் தோட்ட கழிவு, இளநீர் கூடு ஆகியவற்றை இதர பயன்படுத்தும் பொருட்களாக மாற்றும் வகையிலும் கையாளப்படுகிறது.

இதில் புதிய முயற்சியாக, மக்கும் ஈரமான குப்பைகளை இயற்கை எரிவாயுவாக மாற்றும் ஆலைகளை நிறுவி வருகிறது சென்னை மாநகராட்சி.

அரசு மற்றும் தனியார் பங்களிப்புத் திட்டத்தின் மூலம்  தினமும் தலா 100 டன் திடக்கழிவுகளை கையாளக்கூடிய 7 ஆலைகள்  அமைக்கப்பட உள்ளன. இதற்காக சேத்துப்பட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஆலை அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

வீடுகள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் உற்பத்தியாகும் ஈரமான மக்கும் திடக்கழிவுகள் இந்த ஆலை நேரடியாக கொள்முதல் செய்து அதனை தரம் பிரித்து, மாட்டுச் சாணத்துடன் கலந்து 45 நாட்கள் கொள்கலனில் பதப்படுத்தி மீத்தேன் எரிவாயுவை உற்பத்தி செய்கிறது.

மூன்று ஏக்கர் பரப்பளவில் 100 டன் குப்பைகளை கையாளும் இந்த ஆலையில் நாளொன்றுக்கு 4,000 கிலோ மீத்தேன் எரிவாயு, 1,500 கிலோ இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

குப்பையில் இருந்து வாயுவை பிரித்தெடுத்து வடிகட்டிய பின்பு கிடைக்கும் எரிவாயு LPG எரிவாயுவை விட பயன்படுத்துவதற்கு மிகவும் பாதுகாப்பானது, விலை குறைவானது மட்டுமல்ல சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பில்லாதது.

சிறிய கன்வெர்ட்டர் (CONVERTER) மூலம் சமையல் அடுப்பு, வாகனங்களில் இந்த எரிவாயுவைப் பயன்படுத்த முடியும் என்கின்றனர்.

இட வாடகை மற்றும் உற்பத்தியாகும் எரிவாயு ஆகியவற்றுக்காக ஆலைகளிடம் இருந்து கிலோவிற்கு ஒரு ரூபாய் 39 காசுகளை மாநகராட்சி பெற்றுக் கொள்கிறது.

மிகக் குறைந்த அளவிலான பணம் மட்டுமே மாநகராட்சிக்கு இதன் மூலம் கிடைத்தாலும், இந்த 7 ஆலைகள் மூலம் மாதத்திற்கு 21,000 டன் கழிவுகள் குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்வது தவிர்க்கப்படுகிறது.

இதனால் அதிகளவில் குப்பை கிடங்குகளில் குப்பைகள் தேங்காமலிருப்பதும், திடக்கழிவு மேலாண்மைக்கான செலவினங்கள் குறைவதும் சென்னை மாநகராட்சிக்கு பெரிய லாபம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments