சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வியாபாரியை தாக்கிய போலீசார் சஸ்பெண்ட்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காவல் உதவி ஆய்வாளாரால் தாக்கப்பட்ட நபர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்த நிலையில், சம்மந்தப்பட்ட உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கொலை வழக்கின் கீழ் கைதும் செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கருமந்துறை பகுதியில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி, அதனை வெளியூர்களுக்கு கடத்திச் சென்று விற்று வருகின்றனர். இதனால் பாப்பநாயக்கன்பட்டி அருகே சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செவ்வாய்கிழமை அவ்வழியாக 3 பேர் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அவர்களை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். எடப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரும் அவரது நண்பர்களும் என்பது தெரியவந்தது.
முருகேசன் மீது மது வாசம் வீசியதால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஏத்தாப்பூர் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி, அவர்களது வாகனத்தைப் பறிமுதல் செய்துகொண்டு நாளை வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து மூவரும் கோபத்துடன் அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றுள்ளனர். சற்று நேரத்தில் மீண்டும் திரும்பி வந்த முருகேசன், ஏன் வாகனத்தில் இருந்து சாவியை எடுத்தீர்கள் என்றும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நினைப்பா என்றும் உதவி ஆய்வாளர் பெரியசாமியிடம் போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பதிலுக்கு காவல் உதவி ஆய்வாளரும் சத்தம் போடவே, அங்கு வாக்குவாதம் முற்றி இருக்கிறது. சுமார் 10 நிமிடங்களுக்கு இந்த வாக்குவாதம் நீடிக்கவே, ஆத்திரமடைந்த காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி, லத்தியால் முருகேசனைத் தாக்கியுள்ளார்.
உதவி ஆய்வாளரின் தாக்குதலில் முருகேசன் மயக்கமடைந்துள்ளார். அவரை நண்பர்கள் ஆத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் புதன்கிழமை காலை உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே முருகேசன் உயிரிழந்தார். தகவலறிந்த முருகேசனின் உறவினர்கள் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ்விடம், போலீசார் தாக்கியதாலேயே முருகேசன் உயிரிழந்தார் என புகாரளித்தனர்.
உறவினர் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் பெரியசாமி கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். சம்பவம் குறித்து ஆய்வு செய்த சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, பெரியசாமியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு வந்த ஆத்தூர் மாஜிஸ்திரேட் ரங்கராஜு முருகேசனின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டார்.
Comments