எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் கொள்ளை..! 2 பேரிடம் தனிப்படை விசாரணை... கொள்ளை கும்பலை பிடிக்க தீவிரம்

0 2957
எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் கொள்ளை..! 2 பேரிடம் தனிப்படை விசாரணை... கொள்ளை கும்பலை பிடிக்க தீவிரம்

எஸ்.பி.ஐ. வங்கி டெபாசிட் மிஷின்களில் லட்சக்கணக்கில் பணம் நூதனமுறையில் கொள்ளைபோன விவகாரம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து டெல்லியில் 2 பேரை பிடித்த தனிப்படை போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ. வங்கியின் டெபாசிட் மிஷின்களை மட்டும் குறிவைத்து மர்ம நபர்கள் அரங்கேற்றிய கொள்ளை தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த எஸ்.பி.ஐ. வங்கி பொது மேலாளர், அனைத்து எஸ்.பி.ஐ. டெபாசிட் மிஷின்களில் பணத்தை சரிபார்க்கும் படி சுற்றறிக்கை அனுப்யிருந்தார்.

இதனையடுத்து,மேலும் பல இடங்களில் கொள்ளையன்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

அதன்படி, தமிழகம் முழுவதும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட இந்த கொள்ளையில் இதுவரை 66லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பெரியமேடு எஸ்.பி.ஐ. ஏ.டி.எமில் மட்டும் 3 நாட்களாக 16லட்சம் ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஒரே ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பணம் எடுக்க முடியாது என்பதால், போலி முகவரி மூலம் உருவாக்கப்பட்ட வெவ்வேறு வங்கி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி 190 முறைக்கு மேல் பணம் எடுக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோட்டூர்புரத்தில் 5லட்சம் ரூபாயும், கீழ்ப்பாக்கம் அழகப்பா காலணியில் ஒன்றரை லட்சம் ரூபாயும், தியாகராயர் நகரில் 70ஆயிரம் ரூபாயும் திருடப்பட்டுள்ளது.

அனைத்து எஸ்.பி. வங்கி ஏ.டிஎம். மையங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றிய போலீசார், விசாரணையில் இறங்கினர். முதலில் வளசரவாக்கம் ஏ.டி.எமில் இருந்த சிசிடிவியில், மர்ம நபர்கள் அங்கு நின்று யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டிருந்த காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதனை துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொண்ட போலீசார், ஏ.டி.எம். அமைந்துள்ள இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்கள் மற்றும் சிக்னலை ஆராய்ந்தனர்.

இந்த தொழில்நுட்பத்தை வைத்து மர்ம நபர் ஹரியானாவில் உள்ள நபர்களிடம் செல்போனில் பேசியதை கண்டுபிடித்தனர். மேலும், சிசிடிவியில் இருந்து கொள்ளையர்களின் தெளிவான புகைப்படங்களை கண்டுபிடித்த போலீசார் அதனை ஹரியானா போலீசுக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்ட 2 தனிப்படையும் விமானம் மூலம் டெல்லி விரைந்தது. முதற்கட்டமாக கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை பிடித்துள்ள போலீசார், ஹரியானா போலீஸ் உதவியுடன் ஒட்டுமொத்த கும்பலையும் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதனையடுத்து, வழக்கு மத்திய குற்றப்பிரிவிலுள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments