தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலி, தென்காசி உள்பட விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2018 டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. புதிய மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக, நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.
இந்த 9 மாவட்டங்களிலும் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடத்தப்படாமல் இருந்ததால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் நேற்று விசாரித்தது. தேர்தல் அறிவிக்கை, வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உள்ளாட்சி தேர்தல் நடத்த நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது, தற்போது மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், இனி கால அவகாசம் வழங்கமுடியாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
Comments