போதிய அளவில் தடுப்பு மருந்துகள் இருந்தால் தினமும் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இயலும்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
போதிய தடுப்பு மருந்துகள் கையிருப்பில் இருந்தால், நாள்தோறும் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இயலும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக எம்.எல்.ஏ.வும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள சூழலில் அதனை தடுக்க, சுகாதார கட்டமைப்பை பன்மடங்கு உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த ஆண்டு நீட் தேர்வு உள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா 3ம் அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என்றார். 10 கோடிக்கு மேல் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு தேவைப்படுவதாகவும், போதிய அளவில் இருந்தால் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் வரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த இயலும் எனவும் அவர் தெரிவித்தார்.
89 ஆயிரத்து 618 புதிய படுக்கைகள் கடந்த ஒன்றரை மாதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், குழந்தைகளுக்கான மருத்துவ படுக்கைகளும் தயார் படுத்தப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.
Comments