தமிழக அரசுப்பணிகள், பதவிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என ஆளுநர் உரையில் அறிவிப்பு
தமிழக அரசுப் பணிகளில், பதவிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை என ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. தமிழ் வழி, அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று உரையாற்றினார். அதில் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் உண்மையான நிதிநிலையை விளக்கும் வெள்ளை அறிக்கை ஜூலையில் வெளியிடப்படும், ஆண்டுதோறும் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட், உழவர் சந்தைகளுக்கு புத்துயிரூட்டுதல், மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைத்தல் ஆகிய அறிவிப்புகளும் ஆளுநர் உரையில் இடம்பெற்றன.
ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், கொரோனா தொற்று குறைந்தவுடன் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்வழியில் பயின்றவர்களுக்கும், அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பான எந்த அறிவிப்பும் ஆளுநர் உரையில் இல்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேளாண்மைத்துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கவர்னர் உரை ஏற்பும், ஏமாற்றமும் கலந்த உரையாக உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு எத்தகைய வளர்ச்சிப்பாதையில் பயணிக்கப்போகிறது என்பதை கவர்னர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
Comments