இலவச மாஸ்க் கேட்ட மதுபிரியரை மிதித்த ஸ்டிரிக்ட் போலீஸ்..! பொதுமக்கள் முற்றுகையிட்டனர்
சென்னை கிண்டியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசாரிடம் இலவசமாக மாஸ்க் கேட்டதால் ஏற்பட்ட தகராறில், இரு சக்கர வாகனத்தில் வந்த மதுப்பிரியரை அடித்து உதைத்த போலீசாரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சென்னை கிண்டி 100 அடி சாலையில் ஒலிம்பியா டெக்பார்க் அருகே போக்குவரத்து போலீசார் ஒரு இளைஞரை அடித்து உதைத்துக் கொண்டிருக்க, அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் விசாரித்த போது மதுப்பிரியர் ஒருவரை தாக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டதோடு, போக்குவரத்து போலீசார் எப்படி தாக்கலாம் ? என்று கேட்க, அந்த மதுப்பிரியரோ தன்னை போலீசார் சரமாரியாக தாக்கியதாக புகார் தெரிவிக்க அருகில் நின்ற போலீஸ்காரர் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை
போக்குவரத்து போலீசார் தாக்கியதில் நெற்றியில் ரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்ட கார்த்திக்கிற்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் புறப்பட தயாரான நேரம் செயிண்ட் தாமஸ் மவுண்ட் காவல்துறையினர், கார்த்திக்கை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.
இந்த இரு வீடியோக்களும் வாட்ஸ் அப்பில் வைரலான நிலையில், எதற்காக இந்த தாக்குதல் என்று அந்த பகுதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜீவரத்தினத்திடம் விசாரித்த போது, தங்கள் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மாஸ்க் இல்லாமல், ஹெல்மெட்போடாமல் வந்த கார்த்திகேயன் என்பவருக்கு அபராதம் விதிக்க முயன்றதாகவும், மதுபோதையில் இருந்த அவர், நீங்க தான் இலவசமாக மாஸ்க் கொடுப்பீங்களே, அப்படி ஒன்னு கொடுங்க என்று உரிமையோடு கேட்க , அடுத்த நொடி போக்குவரத்து காவலருக்கும் கார்த்திக்கிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அடிதடி ஏற்பட்டதாகவும், அதில் கீழே விழுந்ததில் இளைஞர் காயம் அடைந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையே, போக்குவரத்து காவலர் அருணகிரி அளித்த புகாரின் பேரில், மது போதையில் சானிடைசர் கேட்டு தகராறு செய்த கார்த்திகேயன் போக்குவரத்து போலீசாரை கல்லால் தாக்க முயன்றதாகவும், அதில் போலீஸ்காரர் தள்ளியதில் கீழே விழுந்த கார்த்திகேயனுக்கு லேசான காயம் ஏற்பட்டுவிட்டதாகவும், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக செயிண்ட் தாமஸ் மவுண்ட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து உயர் காவல் அதிகாரிகள் முழுமையாக விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Comments