எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.ஐ குறிவைத்து கொள்ளை, நூதன முறையில் பல லட்சம் திருட்டு: சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் வலைவீச்சு..!
சென்னையில் எஸ்.பி.ஐ. வங்கி டெபாசிட் மிஷின்களை குறிவைத்து நூதன முறையில் பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த கும்பல் குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை வளசரவாக்கத்தில் எஸ்.பி.ஐ. வங்கி டெபாசிட் மிஷினில் வாடிக்கையாளர்கள் செலுத்திய மற்றும் எடுத்த பணத்தை சரிபார்க்கும் போது 2 லட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளது. இதேபோன்று, ராமாபுரம், வள்ளுவர்சாலை, வேளச்சேரி, தரமணி ஆகிய பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களிலும் பணம் குறைந்துள்ளதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதனையடுத்து, குறிப்பிட்ட நாளில் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் எடுத்தவர்களில் சந்தேகிக்கும்படி தெரிந்த நபர்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர்.விசாரணையில், எஸ்.பி.ஐ.யின் டெபாசிட் செய்யும் ஏ.டி.எம். மிஷின்களை மட்டும் குறிவைத்து ஒரே பாணியில் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. பொதுவாக பணம் டெபாசிட் செய்யும் எந்திரத்தில் பணம் எடுக்கவும் முடியும். டெபாசிட் மிஷின்களில் ஏ.டி.எம். அட்டையை செலுத்தி, எடுக்க வேண்டிய தொகையை 20 நொடிகளுக்குள் எடுக்கவில்லை எனில் மீண்டும் பணம் உள்ளேயே திரும்பிவிடும்.
இந்த தொழில்நுட்பத்தை அறிந்து கொண்ட கொள்ளையர்கள், போலி வங்கிக் கணக்கு தொடங்கி, குறைந்த அளவு தொகையை மட்டும் அதில் வைத்துக் கொண்டு கைவரிசையை காட்டி வந்துள்ளனர். வழக்கமாக ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுக்க வரும் அந்த மர்மநபர்கள், பணம் வந்தவுடன் 20 நொடி வரை அதை எடுக்காமல் இருந்துவிட்டு, அதன்பின் பணம் மீண்டும் உள்ளே செல்லும் போது, சென்சார் பகுதியில் விரல்களை வைத்து தடுத்து நிறுத்தி பணத்தை மட்டும் எடுத்து விடுவார்கள். 20 நொடிக்குள் பணம் எடுக்கப்படாததால் ஏ.டி.எம். மிஷினும் பணத்தை எடுக்க வில்லை என கருதிவிடும்.
இதனால், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் இருப்பு தொகை குறையாது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலமுறை டெபாசிட் மிசின்களில் பல லட்சத்தை கொள்ளை அடித்துள்ளனர். ஒவ்வொரு எந்திரங்களிலும் 10 ஆயிரம் ரூபாய் வீதம் 10 முதல் 15 முறை என 15லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்துள்ளனர்.
ஜப்பான் நாட்டின் ஓ.கே.ஐ. என்ற நிறுவனம் தயாரித்துக் கொடுத்த ஏ.டி.எம். இயந்திரங்களில் மட்டும் கொள்ளை நடந்துள்ளதாக வங்கி அதிகாரிகள் புகாரில் கூறியுள்ளனர். இதனையடுத்து, ஓகேஐ நிறுவனம் தயாரித்த பணம் டெபாசிட் எந்திரங்கள் பயன்படுத்தப்படும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதற்கான வசதியை எஸ்.பி.ஐ. வங்கி நிர்வாகம் தடை செய்துள்ளது.
இந்த ஓகேஐ நிறுவனம் பல வங்கிகளுக்கு ஏடிஎம் மிஷின்கள் தயாரித்துக் கொடுத்து உள்ளதால் அனைத்து வங்கி அதிகாரிகளும் தங்கள் வங்கி ஏடிஎம்களில் மோசடி நடந்துள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, டெபாசிட் மிஷின்களை மட்டும் குறிவைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடிக்க 2தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2 நாள் முகாமிட்டு கொள்ளையடித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிவிட்டதாகவும், சென்னை தவிர்த்து வேலூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் இதே பாணியில் எஸ்பிஐ ஏடிஎமில் கைவரிசை காட்டியுள்ளதாகவும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
அவர்கள் வட மாநிலங்களுக்கு சென்று இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
Comments