உலக யோகா நாள் கடைப்பிடிப்பு... நம்பிக்கை ஒளிக்கீற்று யோகா என பிரதமர் மோடி கருத்து
உலக யோகாசன நாளையொட்டிக் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
கொரோனா பேரிடர்க் காலத்தில் யோகா நம்பிக்கை ஒளிக்கீற்றாக இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் 2015ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் நாள் உலக யோகாசன நாளாக ஐ.நா. அமைப்பால் அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஆண்டுதோறும் இதே நாளில் உலக யோகாசன நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஏழாம் ஆண்டாக இன்றும் இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் யோகாசன நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மாளிகையில் யோகாசனப் பயிற்சி செய்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, அவர் மனைவி உஷா ஆகியோர் அவர்களின் இல்லத்தில் யோகாசனப் பயிற்சியில் ஈடுபட்டனர். யோகாசனத்தை வாழ்வின் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டும் என வெங்கைய நாயுடு தெரிவித்தார்.
உலக யோகாசன நாளையொட்டித் தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா பேரிடர்க் காலத்தில் யோகா நம்பிக்கை ஒளிக்கீற்றாக இருப்பதாகவும், நோயாளிகள் விரைவில் குணமாக உதவுவதாகவும் தெரிவித்தார்.
நோய் நாடி நோய்முதல் நாடி எனத் தொடங்கும் திருக்குறளையும் மேற்கோள் காட்டிப் பேசினார்.
மத்திய நலவாழ்வுத் துறை அமைச்சர் ஹர்சவர்த்தன் டெல்லியிலும், நிதின் கட்கரி நாக்பூரிலும் யோகாசனப் பயிற்சி செய்தனர்.
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, நலவாழ்வுத்துறை அமைச்சர் சுதாகர் ஆகியோர் பெங்களூரில் உள்ள பூங்காவில் யோகாசனப் பயிற்சி செய்தனர்.
லடாக்கில் கடல்மட்டத்தில் இருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதிகள், கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் சோ ஏரிக் கரை ஆகிய இடங்களில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் யோகாசனப் பயிற்சி செய்தனர்.
ஏழாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு M-Yoga என்ற செயலியை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் பல மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் யோகா பயிற்சி குறித்த வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன.
Comments