தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று தொடக்கம்
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் இன்று தொடங்குகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதியஅரசு அமைந்த பிறகு எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பதற்காகவும், சபாநாயகரை தேர்ந்தெடுக்கவும் சட்டசபை கூட்டப்பட்டது.
இந்நிலையில், 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குகிறது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சபாநாயகர் அப்பாவு, சட்டசபைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மரபுப்படி சட்டப்பேரவைக்குள் அழைத்து வருவார்கள். ஆளுநர் தனது உரையை ஆங்கிலத்தில் நிகழ்த்தியபின், சபாநாயகர் அப்பாவு தமிழில் வாசிப்பார்.
புதிய அரசு பொறுப்பேற்ற பின் முதலாவது கூட்டத் தொடர் இது என்பதால், பல்வேறு முக்கிய அறிவிப்புகள் ஆளுநர் உரையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவை நிகழ்ச்சிகள் முடிந்தபின், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடுகிறது. அதில் சட்டசபை கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
சட்டப்பேரவை கூடுவதையொட்டி கலைவாணர் அரங்கில் கிருமிநாசினி தெளித்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பேரவைக்கு வரும் எம்எல்ஏக்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனையும் நடைபெற்றது.
சட்டப்பேரவை கூடுவதையொட்டி, கலைவாணர் அரங்கம் அமைந்துள்ள வாலாஜா சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Comments