மின் விநியோகம் தொடர்பாக புகாரளிக்க புதிய சேவை மையம் : தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மின் விநியோகம் மற்றும் மின் கட்டணம் தொடர்பாக புகாரளிக்கும் வகையில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மின்னகம் என்ற பிரத்யேக நுகர்வோர் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் மின் விநியோகம் தொடர்பாக புகாரளிக்க மண்டல மற்றும் மாவட்ட வாரியாக தனித்தனி எண்களும், 1912 என்ற எண்ணும் செயல்பாட்டில் இருந்தன.
அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததால், 24 மணி நேரமும் செயல்படும் மின்னகம் என்ற புதிய ஒருங்கிணைந்த நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக 94987 94987 என்ற செல்போன் எண்ணை அறிமுகம் செய்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதவி எண்ணுக்கு வந்த அழைப்புகளை கையாண்டு மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த நுகர்வோர் சேவை மையத்தில் ஒரு ஷிப்டுக்கு 65 பேர் வீதம் மூன்று ஷிப்டுகளுக்கு 195பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சேவை மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை கணினியில் பதிவு செய்தால் மட்டும் போதுமானது.
பெறப்பட்ட புகார்கள் தானியங்கியாக வாட்ஸ் அப் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு செல்லும் வகையில் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் புகார்கள் மீதான நடவடிக்கைகளை கண்காணிக்க, மாவட்டங்களிலுள்ள மேற்பார்வையாளர் அலுவலகத்தில் 24மணி நேரமும் செயல்படும் வகையில் 3 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
புகார்தாரரின் கைப்பேசி எண்ணிற்கு புகாரின் எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு, அப்புகார்கள் சரிசெய்யப்பட்டவுடன், அது குறித்த தகவலும், குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதியமின் இணைப்பு உடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின்பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றிகள், மின்தடை குறித்த தகவல் என மின்துறை சார்ந்த தகவல்கள், புகார்கள் எதுவாயினும் 94987 94987 என்ற எண் மூலம் தெரிவிக்கலாம்.
இதுதவிர, மின் வாரிய அதிகாரிகள் மீதான லஞ்சப் புகார்களையும் இந்த உதவி எண் மூலம் தெரிவிக்கலாம். இந்த புகார்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சேவை மையத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த அரை மணி நேரத்திற்குள் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. மேலும், மின்வாரியம் தொடர்பாக ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளம் மூலம் பதிவேற்றப்படும் புகார்களும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு Social Media Cell அமைக்கப்பட்டுள்ளது.
Comments