ஒரு பைசா கூட வரி செலுத்தவில்லை.. சைபர் கிரைமில் சிக்கிய மதனுக்கு அடுத்த சிக்கல்..!
பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுக்கள் மூலம் சிறுவர்கள், பெண்களை ஆபாசமாக பேசி, அதனை யூடியூப்பில் நேரலை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த டாக்சிக் மதன் எனப்படும் மதன் OP சல்லி பைசா கூட வருமான வரி செலுத்தாதது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகாரளிக்கலாம் என காவல்துறை கூறியுள்ளது.
தடை செய்யப்பட்ட பப்ஜி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை எப்படி நுணுக்கங்களுடன் விளையாடுவது என்று யூடியூப்பில் நேரலை செய்த மதன், தன்னுடன் விளையாட இணையும் சிறுவர்கள், பெண்களை ஆபாசமாக பேசியதாக வந்த புகாரில் கைது செய்யப்பட்டான்.
போலீசாருக்கு சவால் விட்டு தருமபுரியில் பதுங்கியிருந்த மதனை, சைபர் கிரைம் போலீசார் சுற்றி வளைத்தனர். தினமும் 20 மணி நேரத்திற்கும் மேல் பப்ஜி விளையாடும் மதன், அந்த கேமிங் வீடியோக்களை யூடியூப்பில் நேரலை செய்து பணம் சம்பாதித்ததோடு, தன்னை ஒரு வள்ளல் போன்று தோற்றத்தை உருவாக்கி ஏழை, எளியோருக்கு உதவுவதாக கூறி ஆன்லைன் மூலம் பணம் பெற்று மோசடி செய்ததும் தெரியவந்தது. மோசடி பணத்தில் 3 சொகுசு கார்கள், 45லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 பங்களாக்களை மதன் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இது தவிர மனைவியின் வங்கிக் கணக்கில் இருந்த 4 கோடி ரூபாய் பணமும் முடக்கப்பட்டது.
இந்த நிலையில், யூடியூப் மூலம் சம்பாதித்த பணத்துக்கு ஒரு பைசா கூட வருமான வரி செலுத்தாதது விசாரணையில் தெரியவந்துள்ளது. பல இலட்சம் மதிப்பில் தங்க, வைர நகைகள் வாங்கி குவித்துள்ள மதன், வருமானத்தை மறைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்க உள்ளனர். இதனிடையே, மதனிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகாரளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. குறைந்த தொகையாக இருந்தாலும் கூட புகாரளிக்க முன்வரலாம் எனக் கூறியுள்ள காவல்துறை, அதற்காக DCPCCB1@GMAIL.COM என்ற மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ளது.
இதனிடையே, மதனின் யூடியூப் சேனல்களில் இருக்கும் வீடியோக்களை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மதனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்புகளில் இருந்த வீடியோக்களை வைத்து, ஆபாசமாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியது மதன் தான் என உறுதி செய்த போலீசார், அதனை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, தருமபுரியில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்ட மதனிடம் விடிய விடிய விசாரணை நடத்திய போலீசார், அவன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளுக்கு தேவையான ஆதாரங்களை திரட்டினர். யூடியூப் வீடியோக்களில் உள்ள குரல் மதனின் குரல் தானா என்பதை உறுதிப்படுத்த மதனை ஆபாச வார்த்தைகளை பேச வைத்து குரல் பரிசோதனை செய்து அவற்றை ஆதாரமாக சேகரித்தனர்.
மேலும், வீடியோக்களில் ஆபாசமாக பேசியது தான்தான் எனவும், தன்னிடம் ஆபாச உரையாடலில் ஈடுபட்டது தனது மனைவி தான் என மதன் வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதனை, ஜூலை 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, மதன் பூந்தமல்லி கிளைச் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டான்.
Comments