ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி..! தடுத்தவரை கொன்ற கொடூரம்

0 6193
ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி..! தடுத்தவரை கொன்ற கொடூரம்

திருவாரூர் அருகே பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற 4 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.  சிக்கிய ஒரு கொள்ளையனை மீட்க மற்ற கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் கூடூர் என்ற இடத்தில் SBI வங்கியின் ATM உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த ATMக்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு கொள்ளையர்கள், அதனை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.

ஏடிஎம் இயந்திரத்தை பெயர்க்கும் முயற்சியின் போது எழுந்த சப்தம் கேட்டு எதிர் வீட்டில் இருந்தவர் பார்த்து ATM கட்டிடத்தின் உரிமையாளர் தமிழரசன் மற்றும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு போனில் தகவல் கொடுத்து, ரோந்து சென்ற காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் வெளியே வரவே கொள்ளையர்கள்  4 பேரும் அவர்கள் வந்த இருசக்கர வாகனங்களில் இருவர் திருத்துறைப்பூண்டி நோக்கியும், இருவர் திருவாரூர் நோக்கியும் தப்பித்து சென்றனர்.

இதனிடையே கட்டிடத்தின் உரிமையாளர் தமிழரசன் ரோந்துக் காவலர்களுடன் கொள்ளையர்கள் இருவரை விரட்டியுள்ளார்.

அப்போது பைக்கை போட்டுவிட்டு கொள்ளையர்கள் தப்பிக்க முயற்சித்தபோது கொள்ளையர்களில் ஒருவன் காவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் சிக்கிய நிலையில் மற்றொருவன் தப்பி ஒடிவிட்டான்.

இதனைத் தொடர்ந்து பிடிபட்ட கொள்ளையனிடம் காவலர்களும், தமிழரசன் மற்றும் பொதுமக்கள்  சேர்ந்து விசாரித்து கொண்டிருந்தனர்.

அப்போது, திருத்துறைப்பூண்டி சாலையில் ஓடிய கொள்ளையர்கள் இருவர் பயங்கர ஆயுதங்களோடு திரும்பி வந்து தங்களின் இருசக்கர வாகனத்தால் காவலர்கள் மீது மோதியுள்ளனர்.

இதனைக் கண்ட பொதுமக்கள் மிரண்டு ஓட, இருசக்கர வாகனத்தின் பின்னால் இருந்த கொள்ளையன் தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் போலீசாரைக் குத்த முயன்றுள்ளான். அப்போது குறுக்கே நின்ற தமிழரசனின் இடதுபக்க மார்பில் அந்த ஆயுதம் குத்திக் கிழித்துள்ளது.

இதில் இதயத்தில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக தமிழரசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அதற்குள், இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

இந்நிலையில் காவலர்களிடம் சிக்கிய கொள்ளையனைப் பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவன் பெயர் மதன் என்பதும், லட்சுமாங்குடியைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகளும், தடயவில் துறையினரும் சோதனை செய்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

முன்னதாக கடந்த 16 ஆம் தேதி நள்ளிரவு கொள்ளை முயற்சி நடந்த ATM  அருகாமையில் இருந்த கந்தன் வெல்டிங் பட்டறையில், வெல்டிங் சிலிண்டருக்கு பயன்படும் குழாய், ரெகுலேட்டர், கட்டிங் மெஷின் போன்றவை திருட்டுபோனது.

அந்தப் பொருட்களைக் கொண்டே இந்தக் கொள்ளை முயற்சி நடந்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் தப்பி ஓடிய கொள்ளையர்கள் 3 பேரையும் துரிதமாக செயல்பட்டு சில மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments