ஆக்ஸிஜன் குறைந்தால் உதவியாளர் செல்போனில் சத்தம் எழுப்பும் அலாரம்..! தமிழக இளைஞரின் கண்டுபிடிப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருக்கும் முதியவர்களின் ஆக்ஸிஜன் அளவை வெளியில் இருக்கும் உதவியாளர்கள் அறிந்து கொள்ள ஏதுவாக கைகடிகாரம் வடிவிலான செல்போன் அலாரம் ஒன்றை விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் 24 வயது பொறியாளர் முகமத் சாகுல் அமீது. வேலையின்றி வீட்டில் இருந்து வரும் இவர், கொரோனா நோய்த் தொற்றால் மூச்சுத்திணறல் பாதிப்பு ஏற்படுவோரின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, ஆக்சிஜன் அலர்ட் சேஃப்டி டிவைஸ் ஒன்றை ஸ்மார்ட் வாட்ச் வடிவில் கண்டுபிடித்துள்ளார்.
இந்த சாதனத்தில் சிம்கார்டு ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. கையில் வாட்ச் கட்டுவதைப்போல, இந்த சாதனத்தை அணிந்து கொள்ள வேண்டும். அப்படி அணிந்து கொள்பவருக்கு, அவருடைய உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்தால் தெரிய வரும்.
அதாவது, ஆக்சிஜன் அலர்ட் சேஃப்டி டிவைஸில் பொருத்தப்பட்டுள்ள சிம் கார்டில், அவசர அழைப்புக்கு யாருடைய எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அந்த எண்களுக்கு முதலில் மெசேஜ் போகும். அடுத்து கால் போகும். அதன்பிறகு அவர்களுடைய செல் வைப்ரேட் ஆகும்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு உடலில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பது தெரிந்து உதவிகள் மேற்கொள்ள முடியும் என்கிறார் சாகுல் அமீது
கொரோனா காரணமாக தனியாக இருக்கும் முதியவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்படும் போது அவர்களால் உதவிக்கு எவரையும் அழைக்க முடியாத நிலையில் அவர்களை மருத்துவரிடமோ, மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்ல முடியாமல் சம்பந்தப்பட்டவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது.
இதனை தடுக்கும் வகையிலும் வயதானவர்களின் உயிரை பாதுகாக்கும் நோக்கத்திலும் இந்த சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்கிறார் சாகுல் அமீது
குறிப்பாக, வீட்டில் தனிமையாக இருப்பவர்கள், இதனை வாங்கி கையில் அணிந்து கொண்டால், அவர்களுக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக ஏற்பட்டால் உடனடியாக அதில் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எண்களுக்கு தகவல் போய்ச் சேரும்.
அப்போது, உடனடியாக அவர்கள் வந்து, இவரை காப்பாற்றுவதற்கு ஏதுவாக இருக்கும். மேலும், மருத்துவமனையில் இந்த சாதனத்தை யார் கையில் அணிந்து இருக்கிறார்களோ, அவர்கள் அந்த சாதனத்தில் மருத்துவருடைய எண்ணை பதிவு செய்தால், சம்மந்தப்பட்ட நபருக்கு ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதாக அந்த மருத்துவருக்கு தகவல் போய் சேரும்.
இதையடுத்து மருத்துவர் உடனடியாக சம்மந்தப்பட்ட வார்டுக்கு சென்று, அந்த நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டுகிறார்
இந்த சாதனத்திற்கு 2 ஆயிரம் ரூபாயை விலையாக நிர்ணயித்துள்ள முஹமத் சாகுல் அமீத்தை அப்பகுதி மக்கள் பாராட்டி வரும் நிலையில் இவர் கல்லூரி காலத்தில் கார் விபத்தைத் தடுக்கும் கருவி ஒன்றையும், கொரோனா நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்து வழங்கும் மினி கார் ஒன்றை செல்போன் மூலம் இயக்குவதையும் கண்டு பிடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Comments