முன்களப் பணியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சித் திட்டம்... பிரதமர் தொடக்கி வைத்தார்..!
கொரோனா பெருந்தொற்று மீண்டும் உருமாற வாய்ப்புள்ளதால், அனைத்து நிலைகளிலும், தயார் நிலையில் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப்பணியாளர்களுக்கான சிறப்புப் பயிற்சித் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் தொடக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், 26 மாநிலங்களில் 111 பயிற்சி மையங்களில் இந்தத் திட்டத்தில் ஒரு லட்சம் முன்களப் பணியாளர்கள் பயிற்சி பெற உள்ளதாகத் தெரிவித்தார்.
தற்போதைய தொற்று, உருமாறி வர வாய்ப்புள்ளதாக எச்சரித்த அவர், சவால்களை எதிர்கொள்ள நாடு தயாராக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கொரோனா பெருந்தொற்று உலகில் உள்ள ஒவ்வொரு நாடு, நிறுவனம், சமுதாயம், குடும்பம், ஆட்கள் என அனைவரது வலிமையையும் சோதித்துள்ளதாகவும், அதை எதிர்கொள்ளத் திறமையை விரிவுபடுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
முழு உடல் கவசம், பரிசோதனை, மருத்துவ உட்கட்டமைப்பு ஆகியன நமது முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகவும், தொலை தூர மருத்துவமனைகளிலும், வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
போர்க்கால அடிப்படையில் 1500க்கு மேற்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும், இலவசமாகத் தடுப்பூசி போட அரசு உறுதிபூண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
Comments