"ஐயோ சாமி என்னை விட்டுடுங்க...” காலில் விழுந்து கதறிய மதன்..!

0 23222

தனது முகத்தை வெளியில் காட்டாமல் ஆபாசப் பேச்சுகளை மட்டுமே மூலதனமாக வைத்து கோடிகளில் புரண்ட யூடியூபர் மதன் போலீசில் சிக்கியுள்ள நிலையில், அவன் பிடிபட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.....

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாட விபிஎன் எனப்படும் பிரைவேட் நெட்வொர்க்கை பயன்படுத்தியதால் ஆபாச யூடியூபர் மதனைப் பிடிப்பதில் சிக்கல் நீடித்தது. தொழில் நுட்ப ரீதியாக பல நுணுக்கங்களை தெரிந்த மதன், யாருக்கும் செல்போனில் கூட தொடர்பு கொண்டதில்லை என்பதால் அவனது ஐபி முகவரியை வைத்து தேடுவதிலும் சிரமங்கள் இருந்தன. மதன் பயன்படுத்திய பிரைவேட் நெட்வொர்க் சர்வர் அவன் அமெரிக்காவில் இருப்பது போலவும் ஆஸ்திரேலியாவில் இருப்பது போலவும் காண்பித்திருக்கிறது.

தனக்கு ஏதோ இமாலய தொழில்நுட்ப அறிவு இருப்பதாக எண்ணி, தன்னை போலீசாரால் நெருங்கவே முடியாது என்பதுபோல கற்பனை செய்துகொண்டு, காவல்துறை குறித்தும் கிண்டலாகப் பேசியிருந்தான் மதன். இதனையடுத்து அவனை உடனடியாகப் பிடிக்க வேண்டும் என தீவிரமாக இறங்கிய போலீசார், தொழில்நுட்ப ரீதியான தேடலை ஒருபுறம் நடத்திக் கொண்டே, பழைய சினிமா பாணியையும் கையில் எடுத்தனர். மதனின் மனைவி கிருத்திகாவை கைக்குழந்தையுடன் விசாரணைக்கு அழைத்து வந்த போலீசார், மதனோடு ஆபாசமாக உரையாடுவது அவர்தான் எனக் கண்டறிந்து கைது செய்தனர்.

தொடர்ந்து மதனின் தந்தையை மடக்கி, அவர் மூலம் மதனோடு அடிக்கடி தொடர்பில் இருக்கும் உறவினர்கள், நண்பர்களின் விவரங்களை அறிந்துகொண்டனர். அதன்படி சேலத்தில் முகாமிட்டிருந்த தனிப்படை போலீசார், வீடு வீடாகச் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அதன் மூலம் மதன் ஒவ்வொரு இடமாக மாறி மாறி தங்கிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின்போதுதான் மதனின் உண்மையான முகம் போலீசாருக்குத் தெரியவந்தது. இவன் தான் மதனா என போலீசார் வியப்புக்குள்ளாக, இவன் தான் அவனா என அக்கம்பக்கத்தினரும் உறவினரும் அதிர்ச்சியடைந்தனர்.

கைக்குழந்தையுடன் மனைவியும் தந்தையும் போலீசில் சிக்கி இருப்பதோடு, நாம் இருக்கும் இடத்தை போலீசார் நெருங்கி விட்டார்கள் என உணர்ந்த மதன் ஒரு கட்டத்தில் தப்பியோட வழியின்றி, தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையத்தில் உறவினர் ஒருவரது வீட்டில் போலீசாரிடம் சிக்கினான்.

தன்னை சுற்றி வளைத்த போலீசாரை கண்டதும் அதிர்ச்சியடைந்த மதன், தனிப்படை போலீசாரின் காலில் விழுந்து அழுது புலம்பியுள்ளான். நீங்கள் நினைக்கும் அளவிற்கு தான் பெரிய ஆள் இல்லை என்றும் ஆபாசமாக பேசியது அவ்ளோ பெரிய குத்தமா என கேட்டு தன்னை விட்டு விடும்படி புலம்பியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மதன்-கிருத்திகா தம்பதி பெயரில் இருந்த வங்கி கணக்குகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். அவற்றில் சுமார் 4 கோடி ரூபாய் பணமிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பாதிக்கும் பணத்தை ஏழை குழைந்தைகளின் கல்விக்கு உதவுவது போல போலி வீடியோக்கள், தகவல்களை பரப்பி அதன் மூலம், தன்னை பின் தொடரும் வசதி படைத்த வீட்டு வாரிசுகளிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மதன் பலருக்கும் உதவி புரிவதாக புகழ்ந்து வீடியோ பதிவிட்டால் அதற்கு ஐயாயிரம் பணம் கொடுத்துள்ளார் என்பதையும் கண்டுப்பிடித்துள்ளனர்.

சட்டவிரோத பணத்தின் மூலம் வாங்கிய மதனின் இரண்டு சொகுசு கார்கள், 3 டேப்கள் மற்றும் ட்ரோன் கேமராவையும் பறிமுதல் செய்துள்ள போலீசார், மதனை சென்னை அழைத்துச் சென்று விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments