கம்பி எண்ணும் டம்மி பாபா மாணவிகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டது தவறில்லையாம்..! அந்த 3 ஆசிரியைகள்

0 13167
கம்பி எண்ணும் டம்மி பாபா மாணவிகளை கட்டிப்பிடித்து முத்தமிட்டது தவறில்லையாம்..! அந்த 3 ஆசிரியைகள்

பள்ளிச்சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரால், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் கம்பி எண்ணிவரும் டம்மி பாபா சிவசங்கரன், சிறுமிகளை கட்டிப்பிடிப்பதும், முத்தமிடுவதும் சகஜமானது என்றும் அது தவறான நோக்கத்தில் இல்லை என்றும் அவரது ஆசிரம பள்ளியில் பணிவிடைகள் செய்து வந்த 3 ஆசிரியைகள் கூறி உள்ளனர்.

பள்ளி சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட புகாரில் பாபா என்று மக்களை ஏமாற்றி கேளம்பாக்கத்தில் ஆசிரமம் நடத்திவந்த சிவசங்கரனை சிபிசிஐடி காவல்துறையினர் டெல்லியில் வைத்து கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

நெஞ்சுவலி நாடகமாடி டேராடூன் மருத்துவமனையில் பதுங்கி இருந்த, சிவசங்கரனின் உடல்நிலை எல்லாம் சரியாக உள்ளது என்பதை மருத்துவ பரிசோதனை செய்து உறுதிபடுத்திய காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

டம்மி பாபா சிவசங்கரன் தலைமறைவாக இருந்தபோது அவர் மீதான பாலியல் புகார் குறித்து விளக்கம் அளிக்க முன்வராத சுஷில் ஹரி பள்ளி நிர்வாகம், அவர் போலீசிடம் சிக்கி தற்போது ஜெயிலில் கம்பி எண்ணி வரும் நிலையில்.

அதுவும் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற குழந்தைகள் ஆணைய பரிந்துரை வழங்கியுள்ள நிலையில் நடந்தது என்ன? என்பதை விளக்குவதாக கூறி தற்போது ஆசிரம பள்ளியில் பணிபுரிந்துவரும் 3 ஆசிரியைகள் உள்ளிட்டோர் நட்சத்திர விடுதி ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இதில் விசேஷம் என்ன வென்றால் சிவசங்கர பாபா பள்ளியில் வைத்து எந்த மாணவிகளிடமும் அத்துமீறவில்லை என்றும் அவரது அறையில் வைத்து என்ன நடந்தது? என்பதை காவல்துறை விசாரித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்த பின்னர் அதுகுறித்து பேசலாம் என்று ஆரம்பித்த அந்த 3 ஆசிரியர்களிடம் செய்தியாளர்கள் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவர்களிடம் உரிய பதிலில்லை.

பாபா சிறுமிகளிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்டாரா ? என்பதை கூறவோ மறுக்கவோ முடியாமல் தவித்த அந்த மூவரும், பாபா தப்பி ஓடவில்லை என்றும் தாங்கள் தான் போலீசுக்கு தகவல் தெரிவித்து பாபாவை போலீசில் சிக்கவைத்ததாக தெரிவித்தனர்.

பாபாவை போலீசில் காட்டிக் கொடுத்ததை ஒப்புக் கொண்ட மூவரில் ஒருவர் கூட, சிறுமிகளை பாபாவிடம் கூட்டிச்சென்ற இரு ஆசிரியைகள் குறித்த கேள்விக்கு, சமாளிப்பையே பதிலாக தந்தனர்.

டம்மி பாபாவின் சேட்டைகளை வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரத்தை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பிய போது, ஆசிரம கோவிலில் நடக்கின்ற சத்சங்கில் பங்கேற்கும் சிறுமிகளை அவர்களது பெற்றோர் முன்னிலையில் சிவசங்கர் பாபா, கட்டியணைப்பதும், முத்தமிடுவதும், தொடுவதும், தட்டிக்கொடுப்பதும் சகஜமாக நடக்கும் என்றும் அது தவறான தொடுதல் அல்ல நல்ல தொடுதல் தான் என்று கூறி சமாளித்தார் ஒரு ஆசிரியை.

தங்கள் பள்ளிக்கூடம் மிகவும் பாதுகாப்பானது என்றும், பாபா ரொம்ம்ம்ப நல்லவர் என்றும் வக்காலத்து வாங்கிய அந்த ஆசிரியைகள், பாபா குறித்து பல்வேறு வதந்திகள் பரவுவதால் தங்கள் நிலையை விளக்கியதாக தெரிவித்தனர்.

அப்போது பள்ளி நேரம் முடிந்த பிறகு பள்ளி மாணவிகள் பாபாவை தனியாக அவரது அறையில் பார்த்து ஆசி பெற வைக்கப்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு மாணவிகளே பாபாவை பார்க்க ஏங்குவார்கள் என்றும், இரண்டு தரப்பிலும் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கூறி நழுவினர்.

3 மாணவிகளின் புகார்களின் பேரில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பாலியல் பாபாவுக்கு ஆதரவாக பள்ளி ஆசிரியைகளே பகிரங்கமாக ஆதரவு தெரிவித்து பொதுவெளியில் பேசி உள்ள நிலையில், உடான்ஸ் பாபாவிடம் அறையில் சிக்கிய அப்பாவி சிறுமிகளின் புகாரை இவர்கள் எப்படி கையாண்டு இருப்பார்கள்? என்பதே சாமானியனின் கேள்வியாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments