இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இந்தியாவில் அனைத்து வசதிகளும் இருப்பதால், முதலீடு செய்ய உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கமான விவாடெக்கின் 5வது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி கவுரவ விருந்தினராக காணொலி காட்சி மூலம் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவும் பிரான்சும் பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றி வருவதாகவும், டெக்னாலஜி மற்றும் டிஜிட்டல் துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.
கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் உலக நாடுகள் கடும் பாதிப்படைந்து, எதிர்காலம் குறித்த கவலை இருக்கும் சூழலில், புதிய கண்டுபிடிப்புகள் தான் மீட்சியாக உள்ளது என்று தெரிவித்தார். கொரோனா பாதிப்பை கண்டறிவது மற்றும் தடுப்பூசி இயக்கத்திற்கு ஆரோக்கிய சேது செயலி, கோவின் தளம் போன்றவை லட்சக்கணக்கானவர்களுக்கு உதவியதாக கூறினார்.
புதிய கண்டுபிடிப்புகளை கைவிடாமல் இருப்பதால் தான் அடுத்து வரும் சவால்களை எதிர்கொள்ள சிறப்பாக தயாராகி இருப்பதாக தெரிவித்தார். புதிய கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தேவையானதை இந்தியா அளிப்பதால், உலக நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.
Comments