மலைப்பகுதிகளில் கனமழை... அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால், தமிழகத்தில் முல்லைப் பெரியாறு, பில்லூர், பவானிசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணைக்கு நொடிக்கு 2807 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 131 புள்ளி 7 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு நொடிக்கு 1400 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து நாலாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் 100 அடி உயரமுள்ள அணையில் இன்று காலை நிலவரப்படி 86 அடிக்குத் தண்ணீர் உள்ளது. அணையின் பாதுகாப்புக் கருதியும் மின்னுற்பத்திக்காகவும் நொடிக்கு ஐயாயிரம் கன அடி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பவானி ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை பவானிசாகர் அணைக்கு நாலாயிரத்து 614 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது. 105 அடி உயரமுள்ள அணையில் 89 அடிக்குத் தண்ணீர் உள்ளது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடகத்தில் பெங்களூர், நந்திமலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் கிருஷ்ணகிரி அணைக்கு நொடிக்கு 251 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. 52 அடி உயரமுள்ள அணையில் நீர்மட்டம் 42 அடியை எட்டியுள்ளது.
Comments