கல்லணைக்கு வந்தது காவிரி நீர்... கிளையாறுகளில் நீர் திறப்பு 7 அமைச்சர்கள் பங்கேற்பு..!
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்ததையடுத்து, அதிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறு ஆகியவற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
குறுவை நெல் பயிரிடுவதற்காக ஜூன் 12ஆம் நாள் மேட்டூர் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விட்டார். இந்த நீர் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, மாவட்டம் வழியாகத் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்து சேர்ந்தது.
கல்லணையில் இருந்து குறுவை நெல் பயிரிடுவதற்காகத் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டப் பகுதிகளின் பாசனத்துக்குக் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறு ஆகியவற்றில் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, சிவசங்கர், அன்பில் மகேஷ், மெய்யநாதன், மா.சுப்பிரமணியன், ஆகியோர் மதகுகளின் பொத்தானை அழுத்தித் தண்ணீர் திறந்துவிட்டனர். நெல் மணிகள், மலர்களைத் தூவிக் காவிரி நீரை வரவேற்றனர்.
கல்லணையில் இருந்து காவிரியில் நொடிக்கு 500 கனஅடி, வெண்ணாற்றில் நொடிக்கு 500 கன அடி, கொள்ளிடத்தில் நொடிக்கு 500 கனஅடி, கல்லணைக் கால்வாயில் நொடிக்கு 500 கன அடி என மொத்தம் 2000 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 7 மாவட்டங்களில் மூன்றரை லட்சம் ஏக்கரில் குறுவை நெல் பயிரிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Comments