அரசு மருத்துவமனையில் கொரோனா பெண் நோயாளி கழுத்தை நெரித்துக் கொலை..! பணத்திற்காக பெண் ஊழியர் வெறிச்செயல்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் 8ஆவது மாடியில் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்தப்பெண் கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. அந்தப்பெண் நோயால் இறந்ததாக அறிக்கை விட்ட தலைநகர போலீசாரை அதிரவைத்த கொலை சம்பவத்தின் திகில் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
தமிழ்நாட்டின் பிரமாண்ட மருத்துவமனை..! தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்றுச்செல்லும் மருத்துவமனை..! என்ற சிறப்புக்குரிய சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தான் இந்த திகில் கொலைச்சம்பவம் நடந்துள்ளது..!
சென்னை மேற்கு தாம்பரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பேராசிரியர் மவுலியின் மனைவி சுனிதாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த மாதம் 22-ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 3-வது தளத்தில் ஆக்ஸிஜன் படுக்கையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மறுநாள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சுனிதாவை மருத்துவமனையில் இருந்து காணவில்லை அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்,
காவல் துறையினருக்கும், சுனிதாவின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
வழக்கமாக மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் காணாமல் போனால் தீவிரமாக தேடிப்பிடித்து அவர்களை தனிமைபபடுத்துவது வழக்கம்.. ஆனால் போலீசாரோ, சுகாதாரதுறையினரோ சுனிதாவை தேட எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகின்றது
இந்த நிலையில், இம்மாதம் 8-ந் தேதி மருத்துவமனையின் 8-வது மாடியில் உள்ள பழைய பொருட்கள் வைக்கும் ஹாலில் சுனிதா அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அழகிய நிலையில் கிடந்த அவரது தலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த செருப்பை வைத்து தான், அது சுனிதாவின் சடலம் என்று கணவர் அடையாளம் காட்டினார்.
இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 70ஆக மட்டுமே இருந்ததால், ஆக்சிஜன் படுக்கையில் முடியாமல் இருந்த சுனிதா, எப்படி தனியாக 3ஆவது தளத்தில் இருந்து 8-வது தளத்திற்கு சென்றிருக்க முடியும்? அதுவும் அங்குள்ள ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தும் மின் பராமரிப்பு அறையில் பிணமாக கிடந்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர், சுனிதாவின் சடலத்தை ஏழு மருத்துவர் கொண்ட மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். உடல் அழுகிவிட்டதால் பிரேத பரிசோதனையின் உடனடியாக எந்த தடயமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
இதற்கிடையே அந்தப்பெண் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தகவல் வெளியான நிலையில் விசாரணை நடத்திய போலீசாரோ, நோயின் தாக்கமே மரணத்திற்கு காரணம் என தெரிய வந்திருப்பதாக கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
இதற்க்கிடையே பிரேத பரிசோதனையின் இறுதிகட்ட அறிக்கையில் சுனிதாவின் கழுத்தில் கயிற்றால் இறுக்கிய தடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து மீண்டும் விசாரணையை தொடங்கிய போலீசார், அந்த கொரோனா வார்டில் அன்றைய தினம் பணியில் இருந்த மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். ஊரெல்லாம் சிசிடிவி வைத்துள்ள நிலையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த மருத்துவமனையில் அதுவும் குறிப்பாக அந்த தளத்தில் சிசிடிவி காமிராக்கள் எதுவும் இயங்காததால் கொலையாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்தது.
இந்த நிலையில், கடந்த 22-ம் தேதி இரவு ஒப்பந்த தூய்மை பணியாளரான ரதிதேவி, சக்கர நாற்காலில் சுனிதாவை அழைத்துச் சென்றதாக ஒரு ஊழியர் போலீசாரிடம் கூற, ரதிதேவியிடம் விசாரித்தபோது, அவர் சுனிதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று சுனிதாவிடம் கட்டாக இருந்த பணத்தை கவனித்த ரதிதேவி, அதை கொள்ளையடிக்க முடிவு செய்துள்ளார்.
கடந்த 22ஆம் தேதி இரவு 12.30 மணி அளவில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறி சுனிதாவை சக்கர நாற்காலியில் வைத்து, ஊழியர்கள் பொருட்களை கொண்டு செல்லும் லிப்டிற்கு தள்ளிச்சென்றுள்ளார். லிப்ட் மூலம் 8ஆவது தளத்திற்கு கொண்டு சென்ற அவர், அங்குவைத்து ஏற்கனவே மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த சுனிதாவின் மூக்கில் இருந்த ஆக்ஸிஜன் டியூப்பை எடுத்து கழுத்தில் போட்டு இறுக்கிக் கொலை செய்து அவரது சடலத்தை அங்கேயே போட்டு விட்டு, அவரிடம் இருந்த செல்போனையும், 9,500 ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.
மறுநாள் வழக்கம் போல பணிக்கு வந்த ரதிதேவி சந்தேகம் வராமல் வழக்கமான பணிகளை செய்து வந்துள்ளார். கட்டடத்தின் 8-வது தளத்திற்கு ஊழியர்கள் யாரும் தினமும் செல்ல மாட்டார்கள் என்பதால், அழுகும் நிலை வரை உடலை யாரும் கவனிக்காமல் இருந்துள்ளனர்.
கிறிஸ்டல் என்ற தனியார் நிறுவனத்தின் மூலம் ஒப்பந்த ஊழியராக பணியமர்த்தப்பட்ட ரதிதேவி கடந்த மூன்று வருடமாக அங்கு பணிபுரிந்து வந்துள்ளார். கணவர் இறந்தவிட இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் திருவொற்றியூரில் வசித்து வருவதாகவும் பணத் தேவை இருந்ததால், தீவிர தொற்று ஏற்பட்டிருந்த சுனிதா எப்படியும் இறந்துவிடுவார் என நினைத்து அவரை கொலை செய்துவிட்டு பணத்தை திருடியதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதித்த ஒரு பெண் நோயாளி அரசு மருத்துவமனையில் கொலை செய்யப்பட்டு, சடலம் அழுகும் வரை அங்கேயே கிடந்தது முதல் வழக்கை விசாரித்த காவல்துறையினரோ பிரேதபரிசோதனையின் இறுதி அறிக்கை வரும் முன்பாக முந்திக் கொண்டு கொலையில்லை என்று அலட்சியமாக அறிக்கை விட்டது வரை, அத்தனையும் மீறி இந்த கொலை வழக்கில் 7 மருத்துவர்களின் நுணுக்கமான பிரேத பரிசோதனை அறிக்கையால் கொலையாளி சிக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments