ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை: அரசின் 7 இலக்குகளை எட்டிட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தல்
புதிதாக பொறுப்பேற்கும் 24 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் 7 இலக்குகளைப் பத்தாண்டு காலத்தில் எட்டிட மாவட்ட ஆட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என்று வலியுறுத்தினார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 22 மாவட்ட ஆட்சியர்கள் நேரிலும், 2 மாவட்ட ஆட்சியர்கள் காணொலியிலும் பங்கேற்றனர். நெருக்கடியான கொரோனா காலக்கட்டத்தில், தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
கல்வியில் - வேலைவாய்ப்பில் - சமூகப் பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரத்தை, பதவியைப் பயன்படுத்தித் தங்களது கடமையை ஆற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார். அரசின் 7 இலக்குகளைப் பத்தாண்டுகாலத்தில் எட்டிட மாவட்ட ஆட்சியர்களின் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என்றும் முதலமைச்சர் அப்போது தெரிவித்தார்.
பொதுவிநியோகத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்துதல், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தல், நீதிமன்ற உத்தரவுகளைக் கவனச்சிதறல்கள் இல்லாமல் நடைமுறைப்படுத்திடுமாறு அவர் ஆட்சியர்களை கேட்டுக்கொண்டார்.
நகர்ப்புற வளர்ச்சியும் ஊரக வளர்ச்சியும்தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள் என்று தெரிவித்த முதலமைச்சர், உத்தரவு போடும் அரசு மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்கும் அரசு என்று கூறி, ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொண்டார்.
Comments