பனங்காட்டு படை கட்சி தலைவர் ஹரி மீது குஜராத் தொழிலதிபர் புகார்
100 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்ததாக பனங்காட்டு படை கட்சி தலைவர் ஹரி மீது குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இஸ்மாயில் சக்ராத் என்ற அந்த தொழிலதிபரிடம் Capital up investment என்ற நிறுவனத்தில் ஆசிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளராக தான் இருப்பதாகவும், 6% வட்டிக்கு கடன் வாங்கி தருவதாகவும் ஹரி ஆசை வார்த்தை கூறியதோடு, கடனுக்கு வரியாக 2கோடியும், கமிஷனாக 25லட்சம் ரூபாயும் கேட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
பின்னர், பொதுத்துறை வங்கியின் பெயரில் போலி ஆவணத்தை காண்பித்து கடன் கிடைத்துவிட்டதாக கூற, 1.5 கோடி ரூபாய் பணத்தை மூன்று தவணைகளாக ஹரிக்கு இஸ்மாயில் அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர், திருவனந்தபுரத்தில் வங்கி கடன் ஒப்பந்த பதிவுக்கான பத்திரப்பதிவு நடக்கும்போது ஹரி தரப்பில் கொடுக்கப்பட்ட பத்திரங்கள் அனைத்தும் போலியானது என தெரியவந்துள்ளது. இதனிடையே, வேறொரு மோசடி வழக்கில் ஹரி கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments