130 அடி போர்வெல் குழியில் சிறுவனை உயிருடன் மீட்ட தமிழகத்து காக்கி சிங்கம்..! சாமர்த்தியம் காப்பாற்றியது

0 10280

ஆக்ரா அருகே 130 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை, தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியின் சாமர்த்தியமான மீட்பு நடவடிக்கையால், 8 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் நிபோரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தரியாய் என்ற கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவன் சிவா, அருகில் மூடப்படாமல் விடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான்.

 திங்கட்கிழமை காலை 7 மணியளவில் சிறுவன் சிவா 130 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் உள்ளே விழுந்த நிலையில் சிறிதுநேரம் கழித்து அவரது பெற்றோர்கள் குழந்தை காணவில்லை என்று தேடத் தொடங்கியுள்ளனர். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், வீட்டின் வாசல் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே எட்டி பார்க்கும் போது அதில் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு உள்ளது.

இதை அறிந்த பெற்றோர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக விரைந்த ஆக்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனிராஜ், தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட 30 பேர் கொண்ட மீட்பு குழுவுடன் அந்த கிராமத்திற்கு விரைந்தார். காவல்துறையினர் அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் மக்கள் நெரிசலால் மண்சரிவு ஏற்பட்டுவிடாமல் இருக்கவேண்டும் என்பதற்காக சுற்றித் தடுப்புகளை அமைத்தனர்.

மீட்புக் குழுவினர் குழிக்குள் முதலில் ஆக்ஸிஜன் குழாய்களை அனுப்பியதோடு, சிறுவனின் நிலை அறிய சிறிய காமிரா ஒன்றையும் உள்ளே அனுப்பிவைத்தனர். நம்ம ஊர் சிறுவன் சுஜித் போலவே கையை தலைக்கு மேலே அசைத்தபடி சிறுவன் அந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது

கையை அவ்வப்போது மேலே அசைத்த வண்ணம் இருந்ததால் அதில் கயிற்றை கட்டி சிறுவனை மெல்ல தூக்கிவிட முடிவு செய்தனர். அதன்படி காமிரா உதவியுடன் சிறுவனின் அசைவுகளை கண்காணித்தனர். எந்த சூழ்நிலையிலும் பதற்றமான முடிவுகளை மேற்கொள்ளாமல் நிதானமாக அதே நேரத்தில் சாமர்த்தியமான முறைகளை கையாண்டனர்.

சிறுவன் விழுந்த சில மணி நேரத்தில் அவனது புகைப்படம் சமூக வலைதளங்களில் சேவ் சிவா என்று வாசகத்துடன் வைரலாக தொடங்கியது . ஆக்ராவில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்கள் அங்கு வந்து ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே 3 பொக்லைன் எந்திரங்களைக் கொண்டு குழிதோண்டும் பணியில் ஈடுபட்டனர். ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில மீட்புக் குழுவினர் ஒருங்கிணைந்து மீட்பு பணியில் தீவிரம் காட்டியதால் 90 அடி ஆழத்திற்கு விரைவாக பள்ளம் தோண்டப்பட்டது

இதற்கிடையே, சிறுவன் விழுந்த குழியில் இருந்தே மீட்கவும் முயற்சி மேற்கொண்டனர். மாலை 4 மணியளவில் சிறுவனின் கையில் லாவகமாக சுருக்குப் போட்டு அதனை மேலே ஒருவர் பிடித்துக் கொள்ள, மற்ற வீரர்கள் லாவகமாக சிறுவனை மேலே தூக்கி வெளியே கொண்டு வந்தனர்.

8 மணி நேரத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மீட்புப் பணியை வெற்றிகரமாக முடித்தனர். குழிக்குள் இருந்து மீட்ட சிறுவனை தனது கையில் தூக்கிவந்து ஆம்புலன்ஸில் ஏற்றினார் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் முனிராஜ்.

பதற்றமின்றி முறையான திட்டமிடல் மற்றும் மத்திய மாநில மீட்பு படையினரின் ஒருங்கிணைப்பான மீட்பு பணியின் காரணமாக சிறுவனை உயிருடன் மீட்க முடிந்ததாக தெரிவித்தார் முனிராஜ்.

விரைந்த நடவடிக்கையால் சிறுவன் சிவாவை உயிருடன் மீட்ட வீரர்களை அங்கு திரண்டிருந்த கிராம மக்கள் வாழ்த்தியதுடன், ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments