திறந்தது குடிவாசல் பாட்டில்பிடி வீரர்கள் மதுவுடன் மல்லுக்கட்டு..! போலீசுக்கு புது தலைவலி
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தர்மபுரி, கந்தர்வகோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சமூக இடைவெளியின்றி டாஸ்மாக் கடைகளில் படைபோல் குடிமகன்கள் திரண்டனர். குடிவாசல் திறந்ததால் உற்சாகம் அடைந்த பாட்டில்பிடி வீரர்களுடன் போலீசாரின் மல்லுக்கட்டு குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
தமிழகத்தில் குடிவாசல் திறக்கப்பட்டதால் காய்ந்து கிடந்த மதுபாட்டில்பிடி வீரர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்று டாஸ்மாக் கடைகளில் மதுபுட்டிகளை வாங்கிச்சென்றனர தர்மபுரியில் உள்ள கடை ஒன்றில் மது பாட்டிலை வாங்கிச்செல்வதற்கு ஆனந்தய்யா லேகியம் வாங்க குவிந்த படை போல பெரும்படையாக திரண்டு நின்றனர்
கந்தவர்கோட்டையிலோ, விதியைமீறி சமூக இடைவெளி இல்லாமல் முரண்டு பிடித்த முரட்டுக்குடிகாரரை போலீசார் மடக்கி பிடித்து தடுத்து நிறுத்தினர். அடங்க மறுத்து திமிறியதால் போலீசாரின் முரட்டுப்பிடியால், குடிவீரர் காவல் நிலையம் இழுத்து செல்லப்படும் நிலைக்கு ஆளானார்.
கட்டுக்கடங்காத பாட்டில்பிடி வீரர்களால் திறந்த கடை மீண்டும் மூடப்பட்டது. பலர் ஏமாற்றத்துடன் நடையைக் கட்டினர்.
இன்னும் சில குடிவீரர்கள் கையில் கிடைத்த பாட்டிலை சாலையில் வைத்து வழிபாடு செய்தனர். அம்பத்தூரில் ஒரு குடிவீரர் சாலையில் சென்ற காரை மறித்து தனது புஜபராக்கிராமத்தை காட்ட, எங்கோ கேட்ட குத்துப்பாடலுக்கு சாலையில் நடனம் ஆடி பீதியை கிளப்பினார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குடிவாசல் திறந்த போதும் பாட்டில்பிடி வீரர்கள் மது குடிக்க ஆர்வம் காட்டவில்லை. நானும் கடையும் தான் இருக்கிறோம் என்ற ரீதியில் அங்குள்ள டாஸ்மாக் காற்றுவாங்கியது..!
Comments