மாஃபிங் போட்டோவால் பாய்பிரண்ட் பிளாக் மெயில்.. உயிரை மாய்த்த மாணவி..! பணம் பறிக்கும் கும்பல் அட்டூழியம்
கோவையில், கல்லூரி மாணவியருடன் நட்பாக பழகி புகைப்படம் எடுத்து அதனை ஆபாசமாக மாஃபிங் செய்து சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கிய தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்த, கிருஷ்ணமூர்த்தி என்பவர் மகள் லாவண்யா . இவர் காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில், இரண்டாம் ஆண்டு பேங்கிங் இன்சூரன்ஸ் படித்து வந்தார். இவருக்கும், நவஇந்தியாவிலுள்ள கல்லூரியில், மூன்றாம் ஆண்டு படித்துவந்த விஜய்சேதுபதியுடன் பேருந்தில் சென்று வரும்போது பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
இருவரும், கல்லூரிகளுக்கு இடையேயான கலைநிகழ்ச்சிகளில், 'செல்பி' மற்றும் குரூப் போட்டோ எடுத்துள்ளனர். இச்சூழலில் மருத்துவ செலவுக்கு என்றும் அவசரமாக பணம் தேவைப்படுவதாக கேட்ட விஜய் சேதுபதியிடம் , மாணவி லாவன்யா தன் வீட்டிலிருந்து, 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 2 பவுன் நகையை கொடுத்து உதவியுள்ளார்.
ஆனால் இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட விஜய்சேதுபதி மீண்டும், மீண்டும் லாவண்யாவிடம் பணம் மற்றும் நகை கேட்க ஒரு கட்டத்தில் மாணவி கோபமடைந்து அவனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய்சேதுபதி மற்றும் அவரது நண்பர்கள், பணம் கொடுக்கவில்லை என்றால், தங்களிடம் இருக்கும் உனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை மாஃபிங் மூலம் ஆபாசமாக மாற்றி, சமூக வலைதளங்களில் பதிவேற்றிவிடுவோம் என்று மிரட்டிஉள்ளனர். மேலும் மாணவி மற்றும் அவரது பெற்றோருக்கு தினமும் பல்வேறு மொபைல் போன் எண்களில் இருந்து பேசிய அந்த பிளாக்மெயில் கும்பல் ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் விவரம் தெரியாமல் நல்லவர்கள் என நினைத்து வில்லங்க கும்பலுடன் பழகிவிட்டோமே என்று விரக்தியடைந்த மாணவி லாவன்யா, சனிக்கிழமை எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாணவி லாவன்யா திங்கட்கிழமை உயிரிழந்தார். இது குறித்து, சிங்காநல்லூர் போலீசில், மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். விசாரணையில், மாணவர் என்று கூறிய விஜய் சேதுபதி கல்லூரி மாணவியரிடம், காதல் வலை வீசி, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்தவன் என்பதும், இதற்கு முன்பும், இந்த மிரட்டல் கும்பல் குறித்து, பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த கேசவ குமார் என்கிற விஜய் சேதுபதி 2019 ஆம் ஆண்டு விஸ்காம் படித்து வந்ததாகவும், இவன் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதால், கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
பாய்பிரண்ட் என்றாலும் விஜய் சேதுபதி, லாவண்யாவை இருசக்கர வாகனத்தில் பல்வேறு இடங்களுக்கு கூட்டிச்சென்று ஜோடியாக செல்ஃபி எடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அவனையும் அவனுடன் சுற்றித்திரியும் பிளாக்மெயில் கும்பலையும் பிடித்து அவர்களது செல்போன் மற்றும் லேப்டாப்களை கைப்பற்றி விசாரித்தால் இன்னும் பல திடுக்கிடும் தகவல் தெரியவரும் என்று கூறப்படுகின்றது.
Comments