ஆபாச யூடியூபர் தலைமறைவு.. சேனலை முடக்க நடவடிக்கை..!
தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டுக்குள் விபிஎன் சர்வர் மூலம் நுழைந்து, அதில் தன்னோடு விளையாட இணையும் சிறுவர், சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசி அவர்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் யூ ட்யூபர் மதனின் யூ ட்யூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், தலைமறைவான மதனை தேடி வருவதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
ஏராளமான இளைய தலைமுறையினரின் வாழ்க்கையை சீரழித்ததால் "பப்ஜி" எனும் ஆன்லைன் விளையாட்டு நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. விபிஎன் எனும் பிரைவேட் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, பப்ஜி விளையாட்டை சட்டவிரோதமாக விளையாடும் இந்த மதன் என்கிற நபர், தன்னோடு விளையாட்டில் இணையும் சிறுவர், சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசுவதாக சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. மதன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என காவல் துறை உத்தரவிட்டிருந்த நிலையில், அவன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, பப்ஜி யூ ட்யூபர் மதன் மீது பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்படி விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.
மதன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்ட ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக கூறும் அதிகாரிகள், தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை பயன்படுத்தி வருவதும், அதில் 18 வயதுக்குட்பட்டோரை ஈடுபடுத்தி வருவதும் மேலும் ஆபாச பேச்சுகளும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்கின்றனர். பெண்கள் பற்றி ஆபாசமாக பேசி மிரட்டுவது, இன்ஸ்டாகிராமில் சிறுமிகளிடம் ஆபாச வீடியோ கால் பேசுவது இது போன்ற குற்றச்சாட்டுகளை விசாரணை நடத்திய பிறகே உறுதிப்படுத்த முடியும் என்கின்றனர்.
இந்த நிலையில், பப்ஜி விளையாட்டை நேரலையில் தனது யூ - ட்யூப் சேனலில் ஒளிப்பரப்பி வரும் மதன், அதன் மூலம் 8 லட்சம் பார்வையாளர்களை வைத்துள்ளான். ஆபாச பேச்சு அடங்கிய அவனுடைய வீடியோக்களை பதிவேற்றி வைத்திருக்கும் "டாக்ஸிக் மதன் 18 பிளஸ்", "மதன்OP" ஆகிய யூ - ட்யூப் சேனல்களை முடக்க காவல் துறையினர் யூ ட்யூப் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும், மதனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Comments