தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டும் மக்கள்..! சில இடங்களில் ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு

0 3155

மிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சில இடங்களில் கட்டுக்கடங்காமல் கூடும் கூட்டத்தால் தள்ளுமுள்ளு ஏற்படும் நிலை உருவாகிறது. தடுப்பூசி கையிருப்பு இல்லை எனக் கூறும் மருத்துவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறுகின்றன.

சேலம் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மையத்தில் கட்டுக்கடங்காமல் கூட்டம் சேர்ந்தது. அப்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இங்கு தடுப்பூசி போடப்படும் என அதிகாரிகள் கூறியதால், அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் எனக்கூறி பொதுமக்கள் பலர் முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நிற்க முயன்றதால் தள்ளுமுள்ளு உருவானது.

அப்போது அவ்வழியாக சென்ற ஆட்சியர் கார்மேகம், பொது மக்கள் கூட்டமாக நிற்பதை அறிந்து காரில் இருந்து இறங்கி வந்து, தனிநபர் இடைவெளியுடன் நிற்குமாறு ஒழுங்குபடுத்தி, அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் எனக் கூறி சமாதானப்படுத்தினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்கள் டோக்கன்களை பெற்றுக் கொண்டு காத்திருந்தனர். திடீரென டோக்கன் வாங்கிய 200- க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததால், ஆத்திரத்தில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரும் மற்றும் மருத்துவர்களும் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்கள், தடுப்பூசி கையிருப்பு இல்லை என அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸை பார்த்து சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

திருவாரூர் பவித்திரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் ஒரே நேரத்தில் திரளானோர் குவிந்தனர். காலை 6 மணிக்கே டோக்கன் வழங்கப்பட்ட நிலையில், சிறிய இடத்தில் அதிகமானோர் கூடியதால் தனிநபர் இடைவெளியை பின்பற்ற இயலாமல் போனது. ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு நின்றதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவர்கள் திணறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments