பாலியல் புகாருக்கு ஆளான சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் விலகல்
பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபா நடத்தும் சுஷில் ஹரி பள்ளியில் இருந்து, 50 சதவீத மாணாக்கர்கள் டிசி வாங்கிச் சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே, சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளி உள்ளது. இப்பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா, தன்னை கடவுளின் அவதாரம் என அழைத்துக் கொண்டு, பள்ளியில் பயிலும் மாணவிகளை பக்தையென கூறி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. 3 மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன், காவல் ஆய்வாளர் ஜெயசங்கர் ஆகியோர் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையிடம் இருந்து பெற்று சிபிசிஐடி போலீசார் புதிதாக வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.
இதனிடையே, சுஷில்ஹரி இண்டர்நேஷனல் பிள்ளைகளை படிக்க வைக்கும் பெற்றோர், பள்ளிக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தால் கலக்கம் அடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கிருந்து டிசி வாங்கி வேறு பள்ளிகளில் சேர்க்கத் தொடங்கியுள்ளனர்.
தொடர்ந்து நாள்தோறும் பல பெற்றோர்கள், பள்ளிக்கு வந்து டிசி வாங்கிச் செல்கின்றனர். இதுவரை 50 சதவீதம் மாணாக்கர்கள் டிசி வாங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுஷில்ஹரி இண்டர்நேஷனல் பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Comments