10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டுமே இருக்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவங்கியது. பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு வழங்கும் மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டும் இருக்கும், மதிப்பெண்கள் இருக்காது எனப் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. வழக்கமாகப் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறும். கடந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு நடத்தவில்லை என்பதால் 2019 - 2020 கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
ஒவ்வொரு பாடப் பிரிவிலும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விடக் கூடுதலாக 15 விழுக்காடு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள இந்த ஆண்டு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் ஏழரை விழுக்காடு உள் ஒதுக்கீடு உள்ளதால் முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு உயிரியல் பாடப்பிரிவைத் தேர்வு செய்ய அதிகமானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவியர் சேர்க்கை குறித்துப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை எனத் தெரிவித்தார். பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்குவது பற்றி இதுவரை பரிசீலிக்கவில்லை என்றும் அவர் பதிலளித்தார்.
Comments