கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்... டீக்கடைகள், பியூட்டி பார்லர்கள் திறப்பு..!
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலாகியுள்ளது. டீக்கடைகள், சலூன்கள், பியூட்டி பார்லர்கள் திறக்கப்பட்டுள்ளன.
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் தவிர இதர 27 மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.
அந்தவகையில், அழகுநிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்கி வருகின்றன. காலையிலேயே கிருமி நாசினி கொண்டு கடைகளை சுத்தம் செய்து கொரோனா தடுப்பு வழிமுறைகளுடன் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களில் நடைபயிற்சி, உடற்பயிற்ச்சிகாக மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். எலக்ட்ரிக்கல்ஸ், ஹார்டுவேர்ஸ், நோட்டு புத்தகம் விற்பனை, ஆட்டோமோபைல் உதிரி பாகங்கள் விற்பனை, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள் காலை 6 மணி முதல் இயங்கி வருகின்றன.
அதேபோல் வீட்டு உபயோக பொருட்களான டி.வி., மிக்சி, கிரைண்டர் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகள், செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் அனுமதியை தொடர்ந்து, கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களிலும் டீக்கடைகள் திறக்கப்பட்டன. தனிநபர் இடைவெளியை கடைபிடித்து வாடிக்கையாளர்களுக்கு பார்சல் சேவையில் மட்டும் டீ வழங்கப்படுகிறது.
மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு - கார வகைகள் விற்கும் கடைகளும் அரசு அறிவித்தது போல் பார்சல் சேவை முறையை பின்பற்றி காலை 8 முதல் மதியம் 2 மணி வரை செயல்படுகின்றன. அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற இ-சேவை மையங்களும் திறக்கப்பட்டுள்ளன.
Comments