ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம்... பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

0 3472

காவிரி டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான ஏல அறிவிக்கையை நிறுத்த வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்குக் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சரின் கடிதத்தில், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகவும், தமிழர் நாகரிகத்தின் ஆணிவேராகவும் காவிரிப் படுகை விளங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். "சோழ நாடு சோறுடைத்து" என்கிற பெருமைக்குரிய காவிரிப் படுகையையும், அதைச் சார்ந்திருக்கும் விவசாயிகளின் நலனையும் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கான ஏல அறிவிக்கையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் வட தெரு என்னும் ஊரும் உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹைட்ரோகார்பன் உற்பத்திக்காக ஆழ்குழாய்க் கிணறுகளை அமைத்தால், வளமான காவிரிப் படுகையிலுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும் எனத் தெரிவித்துள்ளார்.

காவிரிப் படுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் உற்பத்தி செய்ய ஆழ்குழாய்க் கிணறுகளை அமைக்கக் கூடாது என்பது தமிழ்நாடு அரசின் உறுதியான கொள்கை எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஹைட்ரோகார்பன் ஏலத்திலிருந்து வடதெரு பகுதியை நீக்கவேண்டுமென்றும், எதிர்காலங்களில் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோலிய அமைச்சகம் ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளைத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனையும், காவிரிப் படுகையின் வளத்தையும் "கண்ணை இமை காப்பது போலத் தங்கள் அரசு காக்கும் எனத் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments