தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0 7015

தமிழத்தில் நாளை முதல் தேநீர் கடைகளைத் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். 27 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து, இதர 27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல், தேநீர்க் கடைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளார்.காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும் பொது மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்லுமாறும், நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பார்சல் முறை விற்பனைக்கு முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.

பொது மக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ - சேவை மையங்கள் 14- 6- 2021 முதல் இயங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது.

கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments