மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவைத்தார். இதன் மூலம் 5 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள மேல்மட்ட மதகுகளை மின் விசையால் உயர்த்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்துவைத்தார். பின்னர் மலர்களையும் நெல்லையும் தூவி தண்ணீரை வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணை நீர் மூலம் 5 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்றார். நீர்மேலாண்மை, நீர் வளம் பெருக்குதல், மகசூல் பெருக்குதல் ஆகியவற்றை அரசு இலக்காக கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர், கடைமடை வரை சென்று சேர்கிறதா என கண்காணிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட முதலமைச்சர், தூர்வாரும் பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.
மேட்டூர் அணை திறக்கப்பட்ட 88 ஆண்டு கால வரலாற்றில், குறித்த நாளான ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது இது 18ஆவது முறையாகும்.
குறுவை பாசனத்திற்கு ஜூன் 12 முதல் செப்டம்பர் 15ஆம் தேதி வரை, 125 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் சுமார் 100 டிஎம்சி நீர் மேட்டூர் அணை மூலம் வழங்கப்படும். மீதமுள்ள நீர்த்தேவை மழை மற்றும் நிலத்தடி நீர் மூலம் நிறைவு செய்யப்படும். மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள நீர் கல்லணைக்கு மூன்று நாள்களில் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments