சென்னையில் நகைக் கடையில் புகுந்து 5 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு..! போலீசார் இரண்டு பேர் பணியிடை நீக்கம்
சென்னையில் நகைக் கடை ஒன்றில் புகுந்து விசாரணை என்ற பெயரில் 5 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாக இரண்டு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பூக்கடை என்.எஸ்.சி போஸ் சாலையில் ஏராளமான நகை கடைகள் உள்ளன. இதில் ஆர்த்தி என்ற நகை கடையை, கடந்த மாதம் 26-ம் தேதி இரவு ஊரடங்கின் போது திறந்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்து பூக்கடை காவல் நிலைய ரோந்து காவலர்களான சஜின், முஜிப் ரஹ்மான் ஆகிய இருவரும் சென்றுள்ளனர்.
கடையின் ஷட்டர் பாதி திறந்திருந்ததால், உள்ளே சென்று பார்த்ததில் கடையின் உரிமையாளர் ஊழியர் ஒருவர் என கட்டுக் கட்டாக பணத்தை எண்ணிக்கொண்டு இருந்துள்ளார். பணம் குறித்து விசாரித்த காவலர்கள் அதில் இரண்டு கட்டுகள் பணம் சுமார் 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு விசாரணைக்கு வருமாறு கூறி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பின்னர் பணத்தை திருப்பியும் தராமல் விசாரணை மேற்கொள்ளாமல் அலைக்கழித்து வந்ததால், நகை கடை உரிமையாளர், காவல் ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து முறையிட்டுள்ளார். பின்னர் இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கியது தெரிந்ததும், பணத்தை எடுத்துச் சென்ற காவலர்கள் சஜின், முஜிப் ரஹ்மான் இருவரும் கடை உரிமையாளரிடம் பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். ஆனால் அதற்கு முன்னரே புகார் அளிக்கப்பட்டதால் இரண்டு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட வடக்கு மண்டல இணை ஆணையர் துரைக்குமார், இருவரிடமும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே கள்ளச்சாராய வியாபாரிகள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடியதாக காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 பேர், வியாழனன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments