கொரோனாவுக்கு END கார்டு அம்மனுக்கு கூல் ஊற்றிய மக்கள்..! யாருக்கும் பாதிப்பில்லை என மகிழ்ச்சி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தங்கள் ஊரில் யாருக்கும் கொரோனா வராமல் பார்த்துக் கொண்டதாக கூறி, கோவிலில் முகக்கவசம் மற்றும் தனிநபர் இடைவெளியின்றி கூடிய மக்கள், அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றிய சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா பரவலின் வேகம் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு காரணமாக தமிழகத்திலும் பல மாவட்டங்களில் கொரோனா 2ஆவது அலையின் பரவல் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒரு சில தளர்வுகளோடு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கோவில் திருவிழா கூட்டங்களுக்கு இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தங்கள் கிராமத்திற்குள் கொரோனா பெருந்தொற்று பரவாமல் காப்பாற்றியதற்காக அம்மனுக்கு நன்றி தெரிவித்து ஊரே ஒன்றுகூடி கொண்டாடியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே நெருப்பாண்டகுப்பம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மனிடம் தங்கள் கிராமத்திற்குள் கொரோனா பெருந்தொற்று வந்து விடக்கூடாது என்று வேண்டுதல் வைத்ததாக கூறப்படுகின்றது.
கொரோனா தொற்று அக்கம்பக்கத்து கிராமங்களில் எல்லாம் பரவிய நிலையில் நெருப்பாண்டகுப்பம் கிராமத்தில் ஒருவர் கூட கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது. தங்கள் ஊர் முத்துமாரிஅம்மன் அருளால் கொரோனா ஊருக்குள் வராமல் தடுக்கப்பட்டுவிட்டதாக நம்பிய இந்த கிராம மக்கள் அம்மனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 101 குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து பூஜை செய்தனர்.
ஊர்வலமாக வந்த போது ஓரளவு தனிநபர் இடைவெளியை கடைபிடித்தவர்கள் கோவில் முன்பு நெருக்கியடித்துக் கொண்டு வரிசைகட்டி நின்றனர்.
மேளதாளம் முழங்க அம்மனுக்கு ஊர் கூடி நன்றிதெரிவித்த இந்த நிகழ்ச்சியில் பூசாரி உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் சற்று உஷாராக மாஸ்க் அணிந்திருந்தனர்
கொரோனா ஊரடங்கு ஆரம்பித்த நாளில் இருந்து அந்த ஊரில் இருந்து ஒருவர்கூட வெளியூர்களுக்கு செல்லாமலும், வெளியூர் நபர்களை ஊருக்குள் விடாமலும் கட்டுப்பாடுடன் இருந்ததாக கூறப்படுகின்றது. இதன்காரணமாக கொரோனா பெருந்தொற்று இந்த ஊருக்குள் பரவில்லை என்று சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் அம்மன் அருளால் ஊருக்குள் இதுவரை அமைதிகாத்த அந்த கிராமத்தினர் ஊரடங்கு முடிந்த பின்னர் இந்த நன்றிக்கடனை செலுத்தி இருக்கலாம் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர் , ஊரடங்கை மீறி ஊர் கூடி கூழ் ஊற்றிய சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
Comments