மாஸ்க் போடச் சொன்ன போலீஸ் மண்டையை உடைத்த கொடுமை..! பழசை எல்லாம் மறந்த சோகம்
சாலையில் முககவசம் இன்றி சுற்றியவரை பிடித்து புத்தி சொன்ன காவலரின் பின் மண்டையில், மாஸ்க் அணியாமல் வந்த மர்ம ஆசாமி கல்லால் தாக்கியதில் , மண்டை உடைந்த காவலர், பழசை எல்லாம் மறந்து குழந்தை போல சிரித்துக் கொண்டே இருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவதில் தமிழக காவல்துறையினர் தினம் தினம் வம்பிழுக்கும் வாகன ஓட்டிகள் மூலம் பல மிரட்டல்களை சந்தித்து வருகின்றனர். கேரள காவல்துறையினரோ ஒரு படி மேலே போய் சில இடங்களில் தாக்கப்படும் அவலம் அரங்கேறியுள்ளது.
அந்தவகையில் மூணாறு அடுத்த மறையூர் காவல்துறையினர் கடந்த ஒன்றாம் தேதி காந்தலூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, பாதசாரி ஒருவர் முககவசம் அணியாமல் நடந்து சென்றார். அவரை அழைத்து முகக்கவசம் அணியாமல் செல்வதால் கொரோனா காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கியதோடு அவருக்கு அபராதம் விதித்துள்ளனர். அதனை கட்ட மறுத்து வாக்குவாதம் செய்த அந்த மர்ம ஆசாமி போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயல அவனை இரு காவலர்கள் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது கீழே கிடந்த கல்லை எடுத்து ஆஷிஷ் என்ற காவலரின் பின் மண்டையில் பலமாக தாக்கியிருக்கிறான்.
தாக்கிய வேகத்தில் அந்த காவலர் நிலை குலைந்து சரிய மாஸ்க் அணியாத மர்ம மனிதன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த காவலர் அஷிசை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தலையில் ஏற்பட்ட வெட்டுக்காயத்திற்கு தையல் போடப்பட்டது. அவருக்கு சுய நினைவு திரும்பாத நிலையில் மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
6 நாட்களுக்கு பின்னர் சுய நினைவு திரும்பிய நிலையில் ஆஷிஷின் குடும்பத்தினருக்கும், உடன் பணிபுரிந்த காவல்துறையினரும் அவரை பார்க்க சென்ற போது அவர்களின் ஒருவரை கூட ஆஷிஷுக்கு அடையாளம் தெரியவில்லை. தலை முடி ஒட்ட வெட்டப்பட்டிருந்த ஆஷிஷுக்கு பழசு எல்லாம் மறந்து போய்விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை கேள்விபட்ட அவரது நெருங்கிய நண்பர்களும், உயர் காவல் அதிகாரிகளும் செல்போன் வீடியோ கால் மூலம் ஆஷிஷை தொடர்பு கொண்டு பழைய நினைவுகளை மீட்டு எடுப்பதற்கு தொடர்ந்து உரையாடி வருகின்றனர். எல்லாவற்றுக்கும் சிறுபிள்ளை போல வெகுளித்தனமான சிரிப்பு ஒன்றையே காவலர் ஆஷிஷ் பதிலாக தெரிவிக்கிறார்.
இன்னும் சில மாதங்களில் காவலர் ஆஷிஷுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் பழசை எல்லாம் மறந்து தவிப்பதை கண்டு அவரது குடும்பத்தினர் சோகத்துடன் தவித்து வருகின்றனர். இதற்கிடையே காவலர் ஆஷிஷை தாக்கிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை கேரள காவல்துறையினர் சுற்றிவளைத்தனர்.
விசாரணையில் அவனது பெயர் சுலைமான் என்பதும் போலீசார் தன்னை அழைத்துச்சென்று சிறையில் அடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காவலரை கல்லால் தாக்கிவிட்டு தப்பியதாக தெரிவித்தான் சுலைமான்..! மாஸ்க் அணியாமல் சாலையில் சுற்றி திரிந்து கொரோனா நோய்பரவலுக்கு வழிவகுத்ததோடு, அவசர புத்தியால் போலீசை கல்லால் தாக்கி தற்போது கொலை முயற்சி வழக்கில் கம்பி எண்ணும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளான் சுலைமான்..!
கொரோனா பெருந்தொற்று காலத்தில், காவல்துறையினர் நமது நன்மைக்கு தானே சொல்கின்றனர் என்பதை கூட உணராமல் அவர்களுடம் மல்லுக்கட்டும் இவர்களை போன்ற வம்பர்கள் திருந்த வேண்டியது காலத்தின் கட்டாயம்..!
Comments