கொரோனா சிகிச்சையில் இருந்த பெண், சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கு : கொலையாக இருக்கலாம் எனும் சந்தேகத்தில் போலீசார் விசாரணை

0 3276

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெண், மின்பராமரிப்பு அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில், மருத்துவமனை ஊழியர்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். 73 சதவீத ஆக்சிஜன் அளவுடன் 3ஆவது தளத்தில் சிகிச்சையில் இருந்து திடீரென மாயமானதாகக் கூறப்பட்ட பெண், 8ஆவது தளத்தில் இறந்து கிடந்தது கொலையாக இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த மவுலி என்பவரது மனைவி சுனிதா, கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 22-ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து மனைவியை காணவில்லை என அவரது கணவர் புகாரளித்த நிலையில், மருத்துவமனையின் 8-வது மாடியில் நேற்று முன்தினம் சடலமாக அந்த பெண் மீட்கப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், மருத்துவமனை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். 23-ந் தேதி அந்த பெண் வார்டில் இருந்து காணாமல் போனதாக வார்டு ஊழியர்கள் தான் தகவல் தெரிவித்ததாகவும், அதன் பின்னர், பெண்ணின் கணவருக்கு தகவல் தெரிவித்து 31-ந் தேதி தான் அவர் புகார் அளித்ததாவும் போலீசார் கூறுகின்றனர்.

மருத்துவமனை வளாகத்தில் மூன்றாவது டவர் பிளாக்கில் 3வது தளத்தில் உள்ள கோவிட் வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண், 8-வது தளத்தில் உள்ள ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தும் மின் பராமரிப்பு அறையில் சடலமாக கிடந்தது எப்படி ? என்பது தான் இவ்வழக்கில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சுனிதா அனுமதிக்கப்பட்ட போது 73 சதவீத ஆக்சிஜன் அளவுடன் ஆக்சிஜன் சிகிச்சையில் இருந்தார் என்றும், வேறொருவர் துணை இல்லாமல் 8-வது தளத்திற்கு சென்றிருக்க முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் 3- வது டவர் பிளாக்கில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்த பெண் காணாமல் போன நாளில், பணியில் இருந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, காணாமல் போன பெண்ணின் சடலத்தை ஏழு பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

உடல் அழுகிய நிலையில் இருந்ததால், இயற்கைக்கு மாறான மரணமாக இருந்தால் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், உடல் உறுப்பு மாதிரிகள் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்படுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments