மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கும் திட்டத்தில் நாளொன்றுக்கு 30 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளோம் - அமைச்சர் மா.சுப்ரமணியன்

0 4382

அரசு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உயரதர உணவகங்கள் மூலம் உணவு வழங்கும் திட்டத்தில் இடைத்தரகர்களை ஒழித்ததன் மூலம், தினமும் ரூபாய் 30 லட்சம் மிச்சப்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கொரோனா பேரிடர் காலத்தில் தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து மக்கள் சேவைபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு தரமான உணவு மற்றும் உயர்தர விடுதிகளில் தங்குவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் இருப்பிட வசதியும், மூன்று வேளை தரமான உணவும் சரியாக வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்த நிலையில், மருத்துவ துறையினரை உயர்தர விடுதிகளில் தங்க வைக்கவும், உயரதர உணவகங்களிருந்து உணவு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு சாதாரண உணவகங்களிலிருந்து உணவுக்கென்று ரூ.600/- முதல் ரூ.550/- வரை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும், உணவகமே வைத்திருக்காதவர்கள் வெளி இடத்தில் உணவை வாங்கி முறைகேடாக பணம் பெற்று வந்தது தெரிய வந்துள்ளதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.

கடந்த 21ஆம் தேதிக்குப் பிறகு அடையாறு ஆனந்த பவன், நம்ம வீட்டு வசந்தபவன், சரவண பவன், சங்கீதா போன்ற
உயர்தர சைவ உணவகங்களிலிருந்தும், வசந்த பவன்-குரு மெஸ், நந்தனாஸ் ஆகிய அசைவ உணவகங்களிலிருந்தும் தரமான உணவுகள் 450 ரூபாய்க்கு சென்னையில் வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இதேபோல தமிழ்நாடு முழுவதும் 375 ரூபாய் முதல் 350 ரூபாய் என்று மாவட்டத்திற்கேற்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறையினர் சாதாரண விடுதியில் தங்குவதற்கு 900 ரூபாய் என கட்டணம் இருந்ததாகவும், கடந்த 21ஆம் தேதிக்குப் பிறகு, பார்க், வெஸ்ட்டின் பார்க், சபரி இன், பிரியதர்ஷினி பார்க், சென்னை கேட்வே, அருணாச்சல ரெசிடன்சி போன்ற உயர்தர தங்கும் விடுதிகளில் பிசினஸ் கிளாசில் தங்க வைக்கப்படுகின்றனர் என்றும் மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

தங்கும் விடுதி கட்டணம் கடந்த ஆட்சியில் 900 ரூபாய் செலவழித்த நிலையில் திமுக ஆட்சியில் 750 ரூபாயாக குறைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் நாள்தோறும் 30 லட்ச ரூபாயும், மாதம் ஒன்றுக்கு தமிழக அரசுக்கு தற்போது சுமார் 9 கோடி முதல் 10 கோடி வரை மிச்சப்படுகிறது என்றும், கடந்த ஆட்சியில் இந்த பணம் வீணாக தரகர்களுக்கு வழங்கப்பட்டு வந்ததாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments