வேலூரில் கள்ளச்சாராய வியாபாரிகள் வீட்டில் கொள்ளை அடித்த போலீஸ்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே கள்ளச்சாராய வேட்டைக்குச் சென்றபோது வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடியதாக காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ஊசூர் அடுத்த குருமலை நச்சுமேடு கிராமத்தில் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாகக் கிடைத்தத் தகவலை அடுத்து, அரியூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பழகன் தலைமையிலான 4 காவலர்கள் அங்கு சென்றனர்.
சாராயம் காய்ச்சுவதாக அறியப்பட்ட இளங்கோ மற்றும் செல்வம் ஆகியோரின் வீடுகளில் இருந்த சுமார் 1000 லிட்டர் சாராய ஊறல், 8 மூட்டை வெல்லம், 50 லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்ச தேவையான மூலப்பொருட்களையும் போலிசார் அழித்துள்ளனர். போலீசார் வருவதை அறிந்து இளங்கோவும் செல்வமும் தலைமறைவான நிலையில், பூட்டியிருந்த அவர்களது வீடுகளின் பூட்டுகளை உடைத்து, உள்ளே இருந்த பொருட்களை சூறையாடிய போலீசார், பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை எடுத்துக் கொண்டனர் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மலையை விட்டு கீழே இறங்கிய போலீசாரை அப்பகுதி கிராம மக்கள் சுற்றி வளைத்துள்ளனர். தொடர்ந்து அங்கு வந்த பகாயம் காவல் ஆய்வாளர் சுபா, பணம், நகையை போலீசாரிடமிருந்து மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு, அரியூர் உதவி ஆய்வாளர் அன்பழகன், காவலர்கள் யுவராஜ், இளையராஜா உள்ளிட்ட 3 பேர் மீது, பகலில் வீட்டை உடைத்து திருடுதல் உட்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அணைக்கட்டு, ஊசூர், சோழவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மலை கிராமங்களில் கள்ளச்சாராய தயாரிப்பும் விற்பனையும் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ்வப்போது இப்பகுதிகளுக்கு சாராய வேட்டைக்குச் செல்லும் போலீசார், கள்ளச்சாராய ஊறல்களை அழித்து வருகின்றனர். சமயங்களில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவமும் அரங்கேறுகிறது. உயிரைப் பணையம் வைத்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போலீசாருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக இதுபோன்ற ஒரு சில போலீசார் செய்யும் செயல்கள் அமைந்துவிடுகின்றன என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதனிடையே, கள்ளச்சாராய வியாபாரிகள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தைத் திருடியதாக எழுந்த புகாரில் சிக்கிய, காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து வேலூர் எஸ்.பி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.
Comments