அள்ளிக்கொடுக்கும் அன்பு நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு..! மாற்றத்தை உண்டாக்கும் திறனாளிகள்

0 3775
அள்ளிக்கொடுக்கும் அன்பு நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு..! மாற்றத்தை உண்டாக்கும் திறனாளிகள்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தசை சிதைவு நோயால் நடக்க இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி சகோதரர்கள் இருவர், தங்களுக்கு மாதந்தோறும் அரசு வழங்கும் உதவி தொகையை தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே முக்கம்பட்டியை சேர்ந்த மீன் வியாபாரி வைரவபாண்டி-இந்துமதி தம்பதியருக்கு 21 வயதில் மனோஜ், 19 வயதில் நிதீஷ், 17 வயதில் பிரதீஷ்ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் மனோஜ், மற்றும் பிரதீஷ் ஆகிய இருவரும் தசைசிதைவு நோயால் நடக்க இயலாத நிலைக்கு தள்ளப்பட்ட மாற்றுத்திறனாளிகள்..!

இதில் மூத்த மகன் மனோஜ் திருவாதவூர் அரசுப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு வரை மற்ற மாணவர்களைப்போல சராசரி மாணவனாக பள்ளி சென்றுவந்த நிலையில் திடீரென தடுமாற்றம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் , மருத்துவ மனையில் பரிசோதித்த பொழுது தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் வீட்டிலேயே முடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

மனோஜை போலவே மூன்றாவது மகன் பிரதீஸும் ஐந்தாம் வகுப்பு பயின்ற பொழுது தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாமல் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. வறுமையின் காரணமாக மூத்த மகன் மனோஜ் அவனது தத்தா பாட்டி வீட்டில் பனைக்குளத்திலும், இளைய மகன் பிரதீஷ் தங்களின் வீட்டிலும் வைத்து பராமரித்து வருகின்றனர்.

கொரோனா பெருந்தோற்று நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சகோதரர்கள் இருவரும் ,தாங்கள் மாதந்தோறும் தமிழக அரசிடம் பெற்றுவரும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையான, 1500 ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கொடுக்க முன்வந்தனர். நடக்க இயலாமல் படுத்த படுக்கையிலேயே வீட்டில் இருந்தாலும் தங்களின் உதவும் ஆசையை நிறைவேற்ற பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர் மூலமாக மேலூர் வருவாய் கோட்டாட்சியரைத் தொடர்பு கொண்டு தங்கள் நிவாரணத் தொகையை ஏற்றுக்கொள்ள கேட்டுக் கொண்டனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற கோட்டாட்சியர் ரமேஷ் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று பணத்தை பெற்று, கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிவைப்பதாகத் தெரிவித்தார். இருவருக்கும் பொன்னாடை போர்த்தி புத்தகங்களைப் பரிசளித்தார்.

வறுமையிலும், உடல் இயலாமையிலும் , தங்களுக்கு அரசு வழங்கும் உதவியை அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக விட்டுக் கொடுக்கும் இவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல மாற்றத்தை உண்டாக்கும் திறனாளிகள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments