ஆர்.பி.சவுத்ரிக்கு எதிராக படம் எடுத்து ஆடும் நடிகர் விஷால் புகார்..! ரூ 3 கோடி விவகாரத்தால் வில்லங்கம்

0 7475

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி சவுத்ரியிடம் பெற்ற 3 கோடி ரூபாய் கடனுக்காக தன்னிடம் பெற்ற காசோலை மற்றும் பத்திரங்களை மறைத்து வைத்துக் கொண்டு தொலைந்து விட்டதாக கூறி ஏமாற்றுவதாக நடிகர் விஷால் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். சவுத்திரியிடம் ஒப்படைத்த துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தின் சேட்டிலைட் உரிமத்தை, கையகப்படுத்த விஷால் ஆடும் சதுரங்கம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

அம்மன், விஜய் நடிப்பில் பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், சரத்குமார் நடிப்பில் நாட்டாமை, சூர்யவம்சம் என 80க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை தயாரித்தவர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி..!

நடிகர் ஜீவாவின் தந்தையான ஆர்.பி. சவுத்ரி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் ஏராளமான படங்களை தயாரித்தாலும், தற்போது அதிக படங்களை தயாரிப்பதை தவிர்த்து புதிய படங்களுக்கு பைனான்ஸ் செய்வதை பிரதான தொழிலாக செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஜீவாவின் நெருங்கிய நண்பரான நடிகர் விஷால் தயாரித்த பல படங்களுக்கு ஆர்.பி.சவுத்திரி நிதி உதவி அளித்து வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, விஷாலே நடித்து இயக்கும் துப்பறிவாளன் படத்தின், இரண்டாவது பாகத்தை விஷால் சொந்தமாக தயாரிப்பதாக கூறி ஆர்.பி.சவுத்ரியிடம் மூன்று கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். அதற்காக விஷால் காசோலை , முத்திரைத்தாள் மற்றும் உத்தரவாத பத்திரத்தில் கையெழுத்திட்டு வழங்கியுள்ளார். அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக படப்படிப்பு தொடங்கவில்லை என்று கூறப்படுகின்றது.

அந்த 3 கோடி ரூபாய் பணத்தை விஷால் தனது தயாரிப்பில் வெளியான சக்ரா படத்திற்கு பயன்படுத்தியதாகவும், அதன் மூலம் கிடைத்த வருமானத்தில், படம் வெளியாவதற்கு முன்பே மூன்று கோடி பணத்தை ஆர்.பி சவுத்ரிக்கு விஷால் திருப்பி கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், விஷால் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட உத்தரவாத பத்திரம், காசோலை, முத்திரை தாள் பத்திரம் போன்ற ஒப்பந்த பத்திரங்களை ஆர்.பி சவுத்ரி திருப்பி தரவில்லை என குற்றம்சாட்டி, விஷால் சார்பில் தியாகராயர் நகர் துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது

மேலும் விஷால் நடித்த "ஆம்பள" என்ற திரைப்படத்திற்கு நிதி அளித்த கோத்தாரி என்ற பைனான்சியர் இதே போன்று பணத்தை திருப்பியளித்த பின்னர், உத்தரவாத பத்திரங்களை கொடுக்காமல் பிரச்சினையில் ஈடுபட்டு ஆம்பள படத்தை வெளியிட தடை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டும் விஷால் தரப்பு, ஆர்.பி.சவுத்ரி விவகாரத்திலும் தனக்கு மீண்டும் இதுபோன்ற பிரச்சினை நடந்து விடக் கூடாது என்பதால் புகார் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புகார் மனுவை பெற்றுள்ள போலீசார் முகாந்திரம் இருந்தால் ஆர்.பி.சவுத்ரி தரப்பில் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர்.

இது தொடர்பாக ஆர்.பி.சவுத்ரி தரப்பில் கேட்ட போது, விஷால் கொடுத்த காசோலை, உறுதிமொழி பத்திரம் ஆகியவை தொலைந்து விட்டது என்றும் கடந்த வாரம் இது தொடர்பாக விஷாலிடம் தெரிவித்து அன்றைய தேதியில் பெற்ற காசோலை உறுதி மொழி பத்திரம் உள்ளிட்டவை இனி செல்லதக்கவை அல்ல என்று அவருக்கு ஆர்.பி சவுத்ரி ஒரு உறுதி மொழி பத்திரம் எழுதி கொடுத்து விட்டதாகவும், அதனை பெற்றுக் கொண்டு விஷால் போலீசில் புகார் அளித்திருப்பது ஏன் என்று தெரியவில்லை ?என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்திற்கான சேட்டிலைட் உரிமத்தை விஷால், ஏற்கனவே ஆர்.பி. சவுத்திரியிடம் எழுதி கொடுத்து விட்டார் என்றும், தற்போது உள்ள சூழ்நிலையை அவருக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதற்காக , தொலைந்து போன வெற்றுபத்திரங்கள் மற்றும் காசோலையை வைத்து தனக்கும் ஆர்.பி சவுத்தரிக்குமான சாட்டிலைட் உரிமத்தையும் ரத்து செய்து கையக்கப்படுத்தலாம் என்ற திட்டத்துடன் விஷால் சதுரங்கம் ஆடுவதாகவும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியை சந்தித்து ஆர்.பி சவுத்ரி நிலைமையை விளக்க உள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் விஷாலின் புகாரை எதிர்கொள்ள தொலைந்து போன காசோலை மற்றும் வெற்று பத்திரங்களை தேடி துப்பறியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஆர்.பி. சவுத்ரி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments