விலையேறிய கட்டுமானப் பொருட்கள்... கட்டிட உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் பாதிப்பு..!
தமிழகத்தில் சிமெண்ட், மணல், கம்பிகள் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
மே மாத இடையில் 430ரூபாய்க்கு விற்பனையான ஒரு மூட்டை கோரமண்டல் மற்றும் அல்ட்ரா டெக் சிமெண்ட் 480 ரூபாயாகவும், செட்டிநாடு சிமெண்ட் 360 ரூபாயில் இருந்து 420 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது. பாரதி சிமெண்ட் ஒரு மூட்டையின் விலை 360 ரூபாயில் இருந்து 400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல, 1 டன் 76ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட டாடா நிறுவன கட்டுமானக் கம்பி தற்போது 78ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஏ.ஆர்.எஸ். கம்பிகளும் 66ஆயிரத்திலிருந்து 68ஆயிரமாக உயர்ந்துள்ளது. துர்கா டி.எம்.டி. கம்பிகள் 63ஆயிரம் ரூபாயில் இருந்து 67ஆயிரமாக உயர்ந்துள்ளது.
ஒன்றரை அங்குல ஜல்லி 1 யூனிட் 3,400 ரூபாயில் இருந்து 3,900 ரூபாயாகவும், மூன்றரை அங்குல ஜல்லி 3,600 ரூபாயிலிருந்து 4,100 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. எம்-சாண்ட் ஒரு யூனிட் 5 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. செங்கல் ஒரு லோடு 18 ஆயிரம் ரூபாயிலிருந்து 23 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. பெயிண்ட் விலையும் தரத்துக்கு ஏற்ப லிட்டருக்கு 40 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அனைத்துக் கட்டுமானப் பொருட்களின் விலையும் 30 முதல் 40 சதவிகிதம் வரை செயற்கையாக உயர்த்தபட்டுள்ளதாக கட்டிட பொறியாளர் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ள கட்டிட பொறியாளர் கூட்டமைப்பினர், மூலப்பொருட்களின் விலை ஏறாத நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலை மட்டும் எப்படி உயரும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
கட்டுமானப் பொருட்களின் திடீர் விலையேற்றத்தால் கட்டிட உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் பாதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த விலையை வைத்து ஒப்பந்தம் பேசி பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த திடீர் விலையேற்றம் நஷ்டத்தை ஏற்படுத்தும் என கட்டிடப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ, பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுமானை பொருட்கள் விலை உயர்வை தடுக்க தனிக்கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். கட்டுமானப் பொருட்களின் அபரிதமான விலை ஏற்றத்திற்கான காரணங்களை கண்டறிந்து அதை போக்கி, விலையை கட்டுக்குள் இருக்குமாறு உறுதி செய்ய அவர் வலியுறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு தொழில் மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், இது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், முதலமைச்சரிடம் இது குறித்து ஆலோசிக்கப்பட்டு, கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்,
Comments