பிச்சை எடுத்தே ஹவுஸ் ஓனரான குமரி பிச்சைக்காரர்..! கத்தியுடன் சிக்கிய அலர்ட் ஆறுமுகம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிச்சைக்காரர்களை மீட்டு காப்பகத்திற்கு அழைத்துச்சென்ற போது ஒரு அடி நீள கத்தியுடன் ஒருவர் சிக்கிய நிலையில், ஒருவர் தான் வீடுகட்டி வாடகைக்கு விட்டிருப்பதாகவும் ஆட்டோவில் வந்து பிச்சையெடுப்பதாகவும் கூறி காவல் துறையினருக்கு அதிர்ச்சி அளித்தார்.
கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காமல் தவிக்கும் பிச்சைக்காரர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்து உணவளிக்க நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைந்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் குளித்து முடித்து நல்ல ஆடைகளை உடுத்திக் கொண்டு காலையில் பேருந்து நிலையம் வந்து ஊரடங்கு நேரத்தில் அன்னதானம் செய்யும், யாராவது உணவு யாசகம் தருவார்கள் என்று காத்திருந்த முதியவர்கள் சிலர் சிக்கினர்.
அப்போது ஒருவர் தான் பல வருடம் இங்கு தான் பிச்சை எடுத்து வருவதாகவும் , அதன்மூலம் கிடைக்கும் பணத்தில், கருங்கல் பகுதியில் தான் சொந்தமாக வீடு கட்டி வாடகைக்கு விட்டிருப்பதாகவும், தினமும் ஆட்டோவில் வந்து பிச்சையெடுத்துச் செல்வதாகவும், எனவே தன்னை விட்டு விடும்படியும் போலீசாரிடம் தெரிவித்தார்.
ஆனால் போலீசார் அவரை மட்டுமல்ல பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒருவரையும் விடாமல் விசாரித்து மாநகராட்சி வண்டியில் ஏற்றினர்...
மற்றொரு பிச்சைக்காரர் போலீசிடம் இருந்து தப்பிக்க கையில் கத்தையாக வைத்திருந்த பணத்தை எடுத்து நீட்ட, போலீஸ் அதிகாரி அதனை வாங்கி எண்ணிபார்த்துவிட்டு அவரிடமே கொடுத்ததோடு, இனி இங்கு பிச்சை எடுக்க அனுமதிக்க மாட்டோம் காப்பகத்தில் தான் இருக்க வேண்டும் என்று கூறி அழைத்துச்சென்றார்...
சில மாற்றுத்திறனாளிகளையும், மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் மீட்டு காப்பகத்துக்கு அழைத்துச்செல்ல காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றினர்.
ஒரு பிச்சைக்காரர் ஒரு அடி நீளத்திற்கு கத்தியுடன் சிக்கினார். அவரது பையில் 3 ஆயிரத்து 500 ரூபாய் பணம் இருந்தது. விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பதும் பேருந்து நிலையத்தில் தங்கி பிச்சை எடுத்து வருவதும் தெரியவந்தது.
இரவில் அங்கு வரும் கஞ்சா குடிக்கி கும்பல் பிச்சைக்காரர்களை மிரட்டி பணம் பறிப்பதால், அவர்களை விரட்டுவதற்காக அலர்ட்டாக தான் தற்காப்புக்காக கையோடு கத்தி வைத்திருப்பதாக குமார் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் விசாரணையில் குமார் மீது பழைய வழக்குகள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தாலும், அவரிடம் இருந்த கத்தியை காவல்துறையினர் கைப்பற்றினர்.
ஒரே நாளில் மீட்கப்பட்ட 42 பிச்சைக்காரர்களையும் அபயகேந்திராவில் கொண்டு இறக்கிவிடப்பட்டனர். இவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பிச்சைக்காரர்களில் பலர் வேலை செய்யும் அளவுக்கு தெம்புடன் இருப்பதால் அவர்களுக்கு ஏதாவது வேலை பெற்றுக் கொடுக்கப்படும் என்று தெரிவித்த காவல் ஆய்வாளர் சாம்சன், இனி நாகர்கோவில் பேருந்துநிலையத்தில் பிச்சைக்காரர்களுக்கு அனுமதியில்லை என்றும் மக்களும் உதவுவதாக நினைத்து உழைக்காமல் பிச்சையெடுத்து வாழும் நபர்களை ஊக்கப்படுத்தாதீர்கள், வேலை பெற்றுக் கொடுத்து அவர்கள் பிழைப்புக்கு வழி செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார். நாகர்கோவில் பகுதியில் பிச்சைக்காரர்கள் வெளியில் சுற்றினால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments