உலக்கை அருவி காதல்... உலைவைத்த போக்சோ..! வீணாகும் விட்டில் பூச்சிகள்

0 59049
உலக்கை அருவி காதல்... உலைவைத்த போக்சோ..! வீணாகும் விட்டில் பூச்சிகள்

18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகளின் மனதை கெடுத்து அத்துமீறியதாகவும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் ஒரே நாளில் வெவ்வேறு வழக்குகளில் 10 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். பெற்றோர் எதிர்ப்பை மீறி  நண்பர்களின் உதவியால் உலக்கை அருவியில் சேர்ந்த காதலுக்கு போனசாக கிடைத்த போக்சோ  குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அனந்தபாலம் பகுதியை சேர்ந்த 21 வயது இளைஞர் ஆல்டோ மைக்கேல் டோனிக். இவர் வாணியக்குடி பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியுடன் நட்பாக பழகியுள்ளார். இருவரது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால், 3 நண்பர்களின் யோசனைபடி ஆல்டோ மைக்கேல் டோனிக், தனது காதலியான அந்த மாணவியை வீட்டில் இருந்து அழைத்துக் கொண்டு, உலக்கை அருவி மலை பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்றான். அங்கு வைத்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இனி யாராலும் நம்மை பிரிக்க இயலாது என்று கனவில் மிதந்த மாபிள்ளை மைக்கேலுக்கு ஆப்பாக வந்தது போலீஸ்..!

மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் விசாரணையை முன்னெடுத்த நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், விரைந்து சென்று உலக்கை அருவி மலை பகுதியில் உள்ள வீட்டில் இருந்து மாணவியை மீட்டனர். பின்னர் மாணவியை கடத்திச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஆல்டோ மைக்கேல் டோனிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவனையும், அவனுக்கு உடந்தையாக இருந்த நண்பர்களான கோட்டார் பகுதியை சேர்ந்த சூர்யா, கிஷோர் குமார், காட்வின் மேஸ்வாக் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்

உற்றாரை பெற்றோரை எதிர்த்து சினிமா பாணியில் நண்பர்களால் உலக்கை அருவியில் சேர்ந்த காதலால் 4 பேரும் தற்போது போக்சோ வழக்கில் கம்பி எண்ணிவருகின்றனர். அந்த மாணவி 18 வயதிற்குட்பட்ட சிறுமி என்பதால் காப்பகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

அதே போல விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அடுத்த வி.சித்தமூரில் 16 வயது சிறுமியுடன் காதல் வயப்பட்ட இளைஞர் மோகன்ராஜ் என்பவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி அந்த சிறுமியை சென்னைக்கு அழைத்து வந்தார். போலீசாரிடம் சிக்கிய மோகன்ராஜ், சிறுமியை கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு தற்போது கம்பி எண்ணி வருகின்றார்.

சிறுமிகளின் சம்மதத்தின் பேரில் காதலித்தவர்களே காயம் பட்டு கம்பி எண்ணும் நிலையில் முகனூலில் அறிமுகமான சிறுமியையும் , பக்கத்து வீட்டு சிறுமியையும், டார்ச்சர் செய்தால் போலீசார் சும்மா விட்டு விடுவார்களா என்ன ? அப்படிப்பட்ட சம்பவங்கள் சென்னை காசிமேடு, திருத்தனி மற்றும் கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது.

சென்னை காசிமேட்டு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியுடன் பழகிய சேத்துப்பட்டை சேர்ந்த 24 வயது மனோகர் என்பவர் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் அத்துமீறியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மனோகரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அம்மையார் குப்பத்தை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் , அதே பகுதியை சேர்ந்த டிப்ளமோ படித்துள்ள இளங்கோ என்பவன் முகனூல் மூலமாக அறிமுகமாகி பழகியுள்ளான். முகனூல் மெசேஞ்சரில் அந்த மாணவியிடம் ஆபாசமாக பேசியும் காதலிக்கச்சொல்லியும் டார்ச்சர் செய்து வந்ததால் மாணவியின் பெற்றோர்,காவல்துறையில் புகாரளிக்க, அதனடிப்படையில் இளங்கோவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது போல கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளி அடுத்த நாகரசம்பட்டி கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கத்தை ஏற்ப்படுத்திக் கொண்ட சந்திரகணேஷ் என்பவர் தனது கூட்டாளிகளான ரமேஷ்,ஜீவா ஆகியோருடன் ஆள் இல்லாத நேரம் பார்த்து மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். தனியாக இருந்த மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்ட ந்த கும்பல் அதனை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டியதால், மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் போலீசார் 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போக்சோ சட்டத்தின் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால் சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையும் என்பது சட்ட நிபுணர்களின் கருத்தாக உள்ளது

அதே நேரத்தில் 18 வயதுக்குட்பட்ட மாணவிகளிடம் , இளைஞர்கள் காதலில் விழுந்தால் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் தங்கள் வாழ்க்கையை தொலைக்க நேரிடும் என்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments